ஷேக் ஹசீனாவின் அடுத்த நகர்வு குறித்த எந்த தகவலும் இல்லை: இந்திய வெளியுறவுத் துறை

33 0

 வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் திட்டங்கள் குறித்த எந்த தகவலும் இல்லை என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் ரந்திர் ஜெய்ஸ்வால்) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, டெல்லியில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவும், அவரது சகோதரியும் அடுத்த இடத்துக்குச் செல்லத் தொடங்கியுள்ளார்களா என்ற கேள்விக்கு பதிலளித்தார். “வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவைப் பொறுத்த வரையில், அவரது திட்டங்கள் குறித்து எங்களிடம் தகவல் எதுவும் இல்லை. அவர் விஷயங்களை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அவர்களின் நலனுக்காக அவர்கள் நினைப்பதை அவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

வங்கதேசத்தில் நிலைமை மேம்பட்டு வருகிறது. இடைக்கால அரசு இன்று பதவியேற்கும். இந்த நிகழ்வு நடந்தவுடன் மேலும் புதுப்பிப்புகள் தொடரும். இந்திய அரசைப் பொறுத்தவரை, வங்கதேச மக்களின் நலனே எங்கள் மனதில் முதன்மையானது” என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும், சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜெய்ஸ்வால், “நிலைமையை இந்தியா கண்காணித்து வருகிறது. சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய குழுக்கள் மற்றும் அமைப்புகள் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளதாக தகவல்கள் உள்ளன. வங்கதேசத்தில் சட்டம் – ஒழுங்கை சீக்கிரமாக மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு இருக்கிறது. இது அந்நாட்டின் நலனுக்கும், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் நலனுக்கும் மிகவும் முக்கியம்” என்று கூறினார்.

வங்கதேசத்தில் ஏற்பட்ட நிச்சயமற்ற சூழலுக்குப் பின்னால் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்ஸ்வால், இது தொடர்பான ஒவ்வொரு அம்சத்தையும் இந்தியா ஆய்வு செய்து வருகிறது என்று குறிப்பிட்டார்.