அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு தானாக முன்வந்து 11 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதுவரை உள் இட ஒதுக்கீடுக்கு தடை உத்தரவு நீட்டிக்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ள நிலையில், உள் இட ஒதுக்கீடு அவசியம் அற்றது என்ற கருத்தை இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் முன்வைக்கிறார். கடந்த, 1931-ம் ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. தமிழ் நாட்டில் அருந்ததியர்கள், கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் அந்த உள் இட ஒதுக்கீட்டை திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.
காரணம், தாங்கள் அடர்த்தியாக வசிக்கும் கன்னியாகுமரி, நாகர்கோயில் உள்ளிட்ட மாவட்டங்களில் அந்த உள் இட ஒதுக்கீடு போதுமானதாக இருக்காது என்றனர். அதுபோல், ஈரோடு மற்றும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடு போதுமானதாக இருக்காது என்கிறார். இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டி விவரம்:
அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து உங்கள் கருத்து என்ன? – உள் இட ஒதுக்கீடு என்பது பரவலாக மேலெழுந்த வாரியாக அவர்களை ஏற்றி வைப்பதற்காக பேசுகிறார்கள். ஆனால், நடைமுறையில் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. அந்தளவுக்கு பலன் அளிக்காது. உள் இட ஒதுக்கீட்டால் ஆயிரக்கணக்கானவர்கள் பலன் அடைந்தவர்களாக ஒரு தோற்றம் இருக்கும். உள் இட ஒதுக்கீடு என்பது அவசியம் அற்றது.
ஏற்கெனவே 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என தீர்ப்பளித்துள்ளனர். இப்போது, 7 பேர் கொண்ட நீதிபதிகள் மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக கூறியுள்ளனர். இதிலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளார். இதில், மத்திய அரசே தானாக முன்வந்து 11 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதுவரை உள் இட ஒதுக்கீடுக்கு தடை உத்தரவு நீட்டிக்க வேண்டும். இதுதான் எங்கள் நிலைப்பாடு.
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கிரீமிலேயர் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கு பரவலான எதிர்ப்பு எழுந்துள்ளதே? – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் போகிற போக்கில் கிரீமிலேயர் உத்தரவால் உட்சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இட ஒதுக்கீட்டை புரிந்துகொண்டால் கிரீமிலேயர் குறித்து யாரும் பேச மாட்டார்கள். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளார்கள் என்பதற்காக மட்டும் இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை.
சமூக நீதி மறுக்கப்பட்டவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள் என்பதற்காக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இழிவுகள் இன்னும் தொடர்கிறது. உதாரணமாக, குடியரசு தலைவராக இருந்தாலும் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. ஒரு ராணுவ அமைச்சராக இருந்தாலும் சிலையை திறக்க முடியவில்லை.
எத்தனையோ ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் கூட சாதி ரீதியாக இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, சமூக நீதியை மாற்றியமைக்க சமூக மாற்றத்துக்காகத்தான் இட ஒதுக்கீடு வழங்கப் பட்டதே தவிர பொருளாதார அளவுகோலால் இல்லை.
கிரீமிலேயர் வரைமுறையில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே? – பொதுவாகவே கிரீமிலேயர் இந்த சமூகத்துக்கு அவசியம் இல்லை. இட ஒதுக்கீடு சமூக நீதிக்காகத்தான் கொடுக்கப்பட்டது. பொருளாதார மாற்றத்துக்காக கொடுக்கப்பட்டதல்ல. சமூக நீதிக்காக கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் சமூக நீதி பிரச்சினை தீர்ந்துவிட்டதா? என்றால் இல்லை. ஒரு தலைமுறை முன்னே வந்த தால் முடிந்து போவதும் இல்லை. எனவே, கிரீமிலேயர் என்பதை திரும்பப்பெற வேண்டும்.
முற்பட்ட சமூகத்துக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரில் 10 லட்சம் ரூபாய் வருமான உச்சவரம்பு என் கின்றனர். ஆனால், தலித்களுக்கு மட்டும் 3 லட்சமாக உள்ளது. ஒரு வங்கியில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்யும் கணவன், மனைவிக்கு அவர்கள் கூறிய சம்பளம் வந்துவிடும் போது எப்படி பொருத்தமாக இருக்கும்.
உள்ளாட்சிகளில் துணைத் தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக் கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறீர்களே? – தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது. இதில், துணைத் தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை. தென் மாநிலங்களில் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங் களில் துணைத் தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால், தமிழ் நாட்டில் அந்த இட ஒதுக்கீடு பறிக்கப் படுகிறது.
சட்டத்தில் தேர்தல் முறையை எந்த அரசாங்கம் நடத்தினாலும் தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்பதுதான் விதி. அரசியல் சட்ட நெறியும்கூட. தமிழ்நாட்டில் இது மீறப்படுகிறது. தேர்தல் நடைமுறை மாநில உரிமை என்று கூறி தேர்தல் முறையை மீறுகிறார்கள். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
எனவே, இந்த திராவிட மாடல் அரசு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். துணைத் தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீடு கோரி மாநில அளவில் போராட்டங்கள் நடத்தவும் உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.