2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்கை இன்னாருக்கு அளியுங்கள் என நான் ஒருபோதும் கூறமாட்டேன்

55 0

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதித்தேர்தலில் நிறுத்தும்போது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்கவேண்டும். விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயமாகும். அந்த வாக்கினை இன்னாருக்கு அளியுங்கள் என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் 2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்குகளை யாருக்கு அளிக்கவேண்டும் என்பது குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அவ்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதித்தேர்தலில் நிறுத்தும்போது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்கவேண்டும். விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயமாகும். இதுகுறித்து அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

இந்த வேட்பாளருக்குத்தான் தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கினை அளிக்கவேண்டும் என்று நான் எந்தவொரு கோரிக்கையையோ அல்லது ஆலோசனையையோ முன்வைக்கவில்லை. ஊடகவியலாளர்களால் பல கேள்விகள் முன்வைக்கப்படும்போது, எமது அடிப்படைக் குறிக்கோள்களை நாங்கள் சிதைத்திருப்பதாக எனது பதில்களைத் திரித்து வெளியிடும் பழக்கம் சில ஊடகவியலாளர்களுக்கு இருப்பதைக் காணமுடிகின்றது.

ஆனால் அவை என்னுடைய கருத்துக்களன்று. நான் சில காலத்துக்கு முன்னர் தேர்தலைப் பிற்போட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று கூறியது உண்மைதான். இப்போதும் இந்த ஜனாதிபதித்தேர்தலினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து நான் அஞ்சுகிறேன். எந்தவொரு சிங்கள வேட்பாளரினாலும் 50 சதவீத வாக்குகளைப் பெறமுடியாமல்போகும் பட்சத்தில் நாட்டின் அரசியல் நிலைவரம் கவலைக்கிடமாகலாம்.

பல தீயசக்திகள் நாட்டில் குழப்பநிலையைத் தோற்றுவிக்க முனையலாம். சீனா தனது படையை நாட்டுக்கு அனுப்பவிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. இது சிறுபான்மையினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். நாட்டின் பொருளாதார நிலைவரத்திலும், ஸ்திரத்தன்மையிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

வெளிநாட்டு ஊடுருவல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கலாம். இவையனைத்தையும் கருத்திற்கொண்டே தேர்தலை பிற்போடுவது சிறந்தது என்று நான் கூறினேன். அதேவேளை நாட்டின் நலன்கருதி மூன்று பிரதான வேட்பாளர்களும் இதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கலந்தாலோசிக்கலாம் எனவும் கூறினேன்.

அவ்வாறு கூறியதை மனதில் வைத்துத்தான் சில ஊடகங்கள் நான் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு தமிழ் மக்கள் 2 ஆவது விருப்பு வாக்கினை அளிக்கவேண்டும் என்று கூறியதாக தவறாக செய்தி வெளியிட்டிருக்கின்றார்கள். நாட்டின் நலன்கருதி நான் கூறியதற்கும் தமிழ் பொதுவேட்பாளர் தெரிவில் எனது திடமான முடிவுக்கும் உறவமைத்து கூறியமை பத்திரிகையாளர்களின் ஊகமாகும்.

தமிழ் பொதுவேட்பாளருக்கே தமிழ் மக்கள் தமது முதல் வாக்கினை அளிக்கவேண்டும். 2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையாகும். இன்னாருக்கு அதனை அளியுங்கள் என்று எந்தத் தருணத்திலும் நான் கூறவில்லை. கூறவும் மாட்டேன் என்றார்.