பிரான்சில் 17 மனிதநேயப் பணியாளர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

120 0

சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 மனிதநேயப் பணியாளர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று (04.08.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் பிரான்சு கிளிச்சி நகரப்பகுதியில் குறித்த பணியாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்க உபதலைவர் திரு .பரராஜசிங்கம்
அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரை குறித்த படுகொலையில் சாவடைந்த பணியாளர்களுடன் பணியாற்றிய திரு.ஜெயகாந் கனகசபாபதி அவர்கள் ஏற்றிவைக்க குறித்த படுகொலையில் சாவடைந்த பணியாளர்களில் ஒருவரான கே.கோவர்த்தனி அவர்களின் சகோதரன் திரு.அமுதன் சிங்கநாயகம் மலர்வணக்கத்தை செலுத்தியிருந்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.

குறித்த படுகொலையில் சாவடைந்த செ.கணேஸ் மற்றும் புதல்வியான கணேஸ் கவிதா ஆகியோரின் உறவினரான திரு.து.ஜெயராஜா அவர்களும் கலந்துகொண்டு நினைவேந்தியதுடன் தனது கருத்தினையும் பதிவுசெய்திருந்தார்.

கிளிச்சி மாநகர முன்னாள் நகரபிதா Gille Catoire அவர்களும் கலந்துகொண்டு மலர்வணக்கம் செலுத்தி உரை நிகழ்த்தியிருந்தார்.

அவர் தனது உரையில், நான் தமிழ் மக்களுக்கு நடந்த வன்கொடுமைகளை நன்கு அறிபவன். அதனை அறிந்தே இத்தூபியை கிளிச்சியில் அமைக்க அனுமதி வழங்கி இருந்தேன். இதற்காக பல எதிர்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொண்டவன் நான்.
றுவாண்டா மக்களுக்கு நடந்த அவலங்களை 50 ஆண்டுகள் கடந்து இந்த சர்வதேசம் திரும்பிப் பார்த்தது போல தமிழ்மக்களின் பிரச்சனையையும் சர்வதேசம் விரைவில் திரும்பிப் பார்க்கும். அதனால் நீதிவேண்டித் தொடர்ந்து போராடவேண்டும். அதற்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்றார்.

தொடர்ந்து குறித்த 17 பணியாளர்கள் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றன. நினைவுரைகளை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. க.சச்சிதானந்தம் அவர்கள், சாவடைந்த பணியாளர்களூடன் பணியாற்றிய திரு.ஜெயகாந் கனகசபாபதி அவர்கள், குறித்த படுகொலையில் சாவடைந்த பணியாளர்களில் ஒருவரான கே.கோவர்த்தனி அவர்களின் சகோதரன் திரு.அமுதன் சிங்கநாயகம் அவர்கள் , பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்கள் தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் ஆற்றியிருந்தனர்.

மூதூர் படுகொலைக்கான நீதி கிடைக்கவில்லை என்பதாகவே இவர்களின் உரைகள் அமைந்திருந்ததன.

பிரெஞ்சு மொழியில்
கிளிச்சி தமிழ்ச்சோலை மாணவர்களான
செல்வி ரபிசா ரவிச்சந்திரன், செல்வி அன்சிகா ரவிச்சந்திரன், செல்வன் அமுதன் பிரமோத் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.

இவர்களுடன் ஏனைய கட்டமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், கிளிச்சி தமிழ்ச்சோலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது நினைவு வணக்கத்தைச் செலுத்தியிருந்தனர்.

நிறைவாக கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. க.சச்சிதானந்தம் அவர்கள் தெரிவிக்கையில், குறித்த மனிதநேயப் பணியாளர்களுக்கு நீதிகிடைக்க வேண்டி நாம் தொடர்ந்து போராடுவோம் என்று உறுதி கூறினார்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)