கோபா குழு வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

46 0

மக்கள் தொகை செறிவை கிலோமீற்றருக்கு 300 ஆகவும், வனப் பரப்பை 30% ஆகவும் பேணும் உலக நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைய இலங்கையைவிட தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னிலையில் காணப்படுவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவன்ன தலைமையில் அண்மையில் (25) கூடியபோதே இவ்விடயங்கள் தெரியவந்தன. 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக வனப் பாதுகாப்புத் திணைக்களம் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. உலக நாடுகளில் வனப்பரப்பளவு 31% ஆகக் காணப்படுவதுடன், இலங்கையின் வனாந்தரப் பகுதி 30% அளவில் இருப்பது மிகவும் நல்லதொரு நிலைமையென குறித்த திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இலங்கையில் உள்ள முழு வனாந்தரப் பகுதியையும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடாமை குறித்து அதிகாரிகளிடம் குழு கேள்வியெழுப்பியது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 1.4 மில்லியன் ஹெக்டெயர் வனப்பகுதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன என்றும், சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ஹெக்டெயர் வனப்பகுதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, வர்த்தமானியில் வெளியிடப்படாத வனாந்தரப் பகுதிகளை விரைவில் வர்த்தமானியின் ஊடாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது பற்றிய அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் குழுவுக்கு அனுப்பிவைக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

உலக பாரம்பரியமாக விளங்கும் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கடந்த சில மாதங்களில் மொத்தம் 35000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட வந்துள்ளனர். வனப்பகுதியை சேதப்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை அதிகரிக்க அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுரை வழங்கினார்.

அத்துடன், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தகவல்களை வழங்குவதற்கான மையப்படுத்தப்பட்ட தரவுக் கட்டமைப்பொன்றைப் பராமரிக்காமை குறித்தும் குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்ததோடு, இது தொடர்பான அறிக்கையை குழுவிற்கு அனுப்புமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்குப் பயனுள்ள உள்ளக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாமை குறித்தும் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. கருங்கல் குவாரிகள், சிறிய அளவிலான நீர் மின் உற்பத்தி நிலையங்கள், மின்சாரக் கோபுரங்கள் போன்றவற்றிலிருந்து வருமானங்கள் வசூலிக்கப்பட வேண்டியிருப்பதாக கணக்காய்வு அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, கருங்கல் குவாரிகளுக்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய அனுமதியைவிட அதிகளவான கருங்கல் உடைக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கருங்கல் குவாரிக்கு உரிமம் வழங்கும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, அதற்குத் தேவையான வெடிப்பொருட்களை தேவையான அளவு மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யுமாறு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். அத்துடன், ஒலிபரப்புக் கோபுரங்களை வழங்குவதன் ஊடாக தொலைபேசித் தொடர்பாடல் நிறுவனங்களிடம் இருந்து பாரியளவிலான பணம் பெறப்பட உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதற்கமைய இந்த அனைத்து நிலுவைகளையும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.

அத்துடன், வல்லப்பட்டா எனப்படும் தாவரம் இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணியை கொண்டுவரும் ஒன்றாக அடையாளம் காணப்பட்டிருப்பதால் அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் குழு அறிவுறுத்தியது. குறித்த தாவரத்தைப் பயிரிடுவதைத் தடுப்பதற்கு சட்டம் இல்லை என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இந்தத் தாவரங்கள் காடுகளில் இருந்து வெட்டி அனுமதியின்றி கொண்டு செல்வது சட்டவிரோதமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. வல்லப்பட்டா தாவரத்தின் குணாதிசயங்களைக் கொண்ட அக்விலேரியா எனப்படும் இறக்குமதி செய்யப்பட்ட தாவரம் தற்போது இலங்கையில் பயிரிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வல்லப்பட்டா மற்றும் அக்விலேரியா தாவரங்களை வேறுபடுத்துவது எளிதல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடையாளம் காண்பதில் உள்ள சிரமம் காரணமாக, காடுகளில் இருந்து வெட்டப்படும் வல்லப்பட்டா செடிகளை, தனியார் தோட்டங்களில் இருந்து பெறப்படும் செடிகள் என, விளம்பரப்படுத்த, கடத்தல்காரர்கள் முயற்சித்து வருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, உபுல் கலப்பதி, இசுறு தொடங்கொட ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.