இன,மத ,பேதமின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டும் -ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர

39 0

இன,மத வேறுபாடுகள் ஏதும் இல்லாத வகையில் சிறந்த வினைத்திறனான அரசியல் கட்டமைப்பை தோற்றுவிப்பேன்.இலங்கையர்கள் அனைவரும் கௌரவமாக வாழும் சூழலை உருவாக்குவேன்.எமது நாட்டு மக்கள் பாவம் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலில் பிரவேசித்துள்ளேன்.

என்மீது வைக்கும் நம்பிக்கையை பலவீனப்படுத்தமாட்டேன்.பொருளாதார மீட்சிக்கான கொள்கையை இவ்வாரம் பகிரங்கப்படுத்துவேன் என சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

சர்வஜன சக்தியின் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெற்றது.இதன்போது விசேட உரை நிகழ்த்துகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டுக்காகவே செயற்பட்டுள்ளேன்.அரசியலில் ஈடுபடாத நிலையிலும் பல சந்தர்ப்பங்களில் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளேன் என்பதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபய ராஜபக்ஷவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினேன்.நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கும்,முறைமை மாற்றத்துக்கும் அமைய அவரை ஜனாதிபதியாக்கினார்கள்.அவரது சகோதரர்களும்,குடும்பத்தினரும் அவரை விரட்டியடிப்பார்கள்.நாட்டை நெருக்கடிக்குள்ளாக்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.தாய் நாட்டை முன்னிலைப்படுத்தி செயற்படுவேன்.நாட்டில் இன,மத வேறுபாடுகள் ஏதும் கிடையாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிறந்த அரச நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவது எனது பிரதான இலக்காகும்.

இளைஞர்கள் விரும்பும் வகையில் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து அரச சேவை வினைத்திறனானது என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சூழலை தோற்றுவிப்பது  எனது பிரதான கொள்கையாகும்.பொருளாதார மீட்சிக்கான எமது கொள்கை திட்ட வரைபை இவ்வாரமளவில் வெளியிடுவேன்.

பெருந்தோட்ட மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் பிரதான அங்கமாக காணப்படுகிறார்கள்.அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி இரு தரப்பினரும் அரசியல் செய்கிறார்களே தவிர அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை.பெருந்தோட்ட மக்களை எனது அரசியல் தேவைக்காக மாத்திரம் பயன்படுத்திக் கொள்ளமாட்டேன்,அவர்களுக்கு முன்னேற்றகரமான சூழலை நிச்சயம் ஏற்படுத்திக் கொடுப்பேன்.

தமது ஆட்சியில் திருடர்களை பிடிப்பதாக ஒரு தரப்பினர் குறிப்பிட்டுக் கொண்டு மக்களை தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறார்கள்.சிவப்பு நிற அரசியல் தரப்பினரது வரலாற்றை மக்கள் மறக்கவில்லை.இவர்களால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.இளம் தலைமுறையினர் யதார்த்தத்தை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள இலங்கையர்கள் தாய் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.எமது நாட்டு மக்கள் பாவம் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்  என்பதற்காகவே அரசியலுக்குள் நான் பிரவேசித்துள்ளேன்.எமக்கு வழங்கும் ஆதரவு வீண் போய்விட்டது என்று மக்கள் கருதும் சூழலை ஒருபோதும் நான் தோற்றுவிக்கமாட்டேன் என்றார்.