பிஹார் பள்ளியில் 5 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 10 வயது மாணவன் காயம்

46 0

பிஹாரில் 5 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் சக மாணவன் காயம் அடைந்தார்.

பிஹாரின் சுபவுல் மாவட்டத்தில் புனித ஜோன் உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நர்சரி வகுப்பில் படிக்கும் 5 வயது மாணவன் நேற்று துப்பாக்கியை தனது புத்தகப் பையில் மறைத்து வைத்து, பள்ளிக்கு எடுத்து வந்துள்ளார். பிறகு அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவனை நோக்கி சுட்டதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் 10 வயது மாணவன் கூறுகையில், “நான் எனது வகுப்புக்கு சென்று கொண்டிருந்தபோது, அச்சிறுவன் தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து என்னை நோக்கி சுட்டான். நான் அவனை தடுக்க முயன்றபோது, அவன் எனது கையில் சுட்டான். எனக்கும் அந்த சிறுவனுக்கும் முன்விரோதம் எதுவும் இல்லை” என்றார்.

கவனக்குறைவு: இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வரை போலீஸார் கைது செய்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் துப்பாக்கியால் சுட்டசிறுவன் மற்றும் அவரது தந்தையை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளிக்குவிரைந்து சென்று, பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவர்களின் புத்தகப் பைகளை சோதிக்குமாறு மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.