ஓட்டமாவடி, நாவலடி சந்தியில் இரண்டு T56 துப்பாக்கிகளுடன் மௌலவி ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி, நாவலடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் துப்பாக்கியுடன் பயணிப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அரலகங்வில முகாம் அதிகாரிகளுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வழங்கியுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து T56 துப்பாக்கி,மெகசீன் மற்றும் 29 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பின்னர், சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின்படி, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், அவரது சகோதரர் ஒருவரின் வீட்டை சோதனையிட்டதில், மற்றுமொரு T56 துப்பாக்கி, மெகசீன் மற்றும் 30 தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வாழைச்சேனை, பதுறியா நகரைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், தான் நாவலப்பிட்டி பகுதியில் மௌலவியாக பணியாற்றியதாகத் தெரிவித்தார்.
துப்பாக்கி மீது கொண்ட நாட்டம் காரணமாக முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்து அந்த ஆயுதங்களை வாங்கி வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.