சசிக்கலாவையும், தினகரனையும் கட்சியின் இருந்து ஒதுக்கி வைக்க அ.தி.மு.க. இணக்கம்?

254 0

சசிக்கலாவையும், அவரது உறவினரான ரீ.ரீ.வி. தினகரனையும் கட்சி மற்றும் அரசாங்கச் செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சசிக்கலா மற்றும் ஓ.பன்னீர்ச்செல்வம் ஆகியோர் தலைமையில் இரண்டாக பிளவடைந்தது.

தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சசிக்கலா சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

இதனால் அவரது உறவினரான தினகரன் கட்சியின் பொறுப்புகளை கவனிப்பதற்காக சசிக்கலாவினால் நியமிக்கப்பட்டார்.

அத்துடன் கட்சியின்சின்னத்தை தம்வசப் படுத்துவதற்காக தினகரன் கையூட்டல் வழங்க முற்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் பிளவடைந்துள்ள இரண்டு தரப்பினரையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதன்படி இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, ஓ.பன்னீர்ச் செல்வம் முன்வைத்த நிபந்தனையின் படி, சசிக்கலா மற்றும் தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்தும் அரசாங்க செயற்பாடுகளில் இருந்தும் விலக்கி வைப்பதற்கு சசிக்கலாவின் தரப்பு இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் ஓ.பன்னீர்ச்செல்வமா? அல்லது பழனிச்சாமியா முதலமைச்சராக தொடர்வார் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தினகரன், இன்று அவசர கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருப்பதாக கூறப்படுகிறது.