சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து மும்பை, கோவா, பெங்களூரு செல்லும் விமானங்களில் சோடியம் கரைசல் எனப்படும் திரவ வடிவிலான குண்டுகள் வைக்கப்பட்டுள்ளது என்று சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு புதன்கிழமை பகல் 12 மணி அளவில் இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சம்பந்தமான அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவிடப்பட்டது.
மும்பை, கோவா, பெங்களூரு செல்லும் விமான பயணிகளிடம் வழக்கமான சோதனைகளோடு, மேலும் இரண்டு முறை பாதுகாப்பு சோதனைகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அதிரடிப்படை வீரர்கள், விமான பாதுகாப்பு படை வீரர்கள், விமான கடத்தல் சம்பவங்களை முறியடிக்கும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் மேற்கொண்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
இறுதியில், இது வழக்கமான வெடிகுண்டு புரளி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 10-வது முறையாக சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.