டிக்டொக் நிறுவனத்தின் சர்வதேச தலைமையகங்களில் ஒன்றான சிங்கப்பூர் அலுவலகத்தில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட பல ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்றுள்ளது. இதன்போது, 60 பேருக்கு உணவு ஒவ்வாமையினால் இரைப்பை குடல் அழற்சி ஏற்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பதினேழு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 57 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
இது தொடர்பில் நகர மாநிலத்தில் சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைட் டான்ஸ் அலுவலகங்களில் உணவு சமைக்கப்படுவதில்லை எனவும், வெளியிலிருந்து உணவு வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் ஊழியர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை நாங்கள் தீவிரமாக கண்காணிக்கின்றோம். பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அவசரகால சேவைகளுடன் உதவிகளை வழங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.நாங்கள் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என பைட் டான்ஸ் தெரிவித்துள்ளது.
உணவு வழங்குனர்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) நகர-மாநில சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு சீன தொழில்முனைவோரால் பைட் டான்ஸ் நிறுவனம் நிறுவப்பட்டது.
இந்நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட டூயின் (Douyin) என்ற சிறிய வீடியோ செயலி வெற்றி அளித்தது. அதன் தொடர்ச்சியாக ஒரு வருடம் கழித்து டூயின் செயலியின் சர்வதே பதிப்பாக டிக்டொக் செயலியை அறிமுகப்படுத்தியது.
சீனாவில் பயன்பாட்டில் இல்லாத டிக்டொக் செயலி உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது.
பைட் டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டிக்டொக் செயலியின் தலைமையகங்களை சிங்கப்பூர் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ளது.