உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றை கலந்துரையாடி தீர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்க பிரதிவாதிக்கு முடியாது

39 0

உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பொன்று வழங்கிய பின்னர். அந்த தீர்ப்பு தொடர்பாக பிரதம நீதியரசருடன் அல்லது வேறு நீதியரசர்களுடன் கலந்துரையாடி இதனை தீர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்க  பிரதிவாதிக்கு முடியாது. அவ்வாறு தெரிவிப்பதற்கு முடியும் என நாங்கள் எந்த சட்டப் புத்தகத்திலும் கற்றுக்கொண்டதில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.

அமைப்பு மாற்றத்துக்கான சட்ட மறுசீரமைப்பு தேசிய மாநாடு செவ்வாய்க்கிழமை (30) கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இருக்கும் நீதிமன்றங்களில் உயர் நீதிமன்றத்துக்கு மேல் வேறு நீதிமன்றம் இல்லை. ஆனால் தற்காலத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை நாங்கள் மதிக்கிறோமா என்ற கேள்வி எங்களுக்குள் எழுகிறது. அவ்வாறான நிலையில் மனசாட்சிக்கு உட்பட்டு பதில் அளிப்பதாக இருந்தால் இல்லை என்றே தெரிவிக்க வேண்டி இருக்கிறது. இதுமிகவும் கவலைக்குரிய விடயமாகும். கடந்த 10 வருடங்களாக நீதித்துறையுடன் நான் தொடர்புடையவனாக  இருக்கின்றபோதும் இவ்வாறானதொரு நிலையை நான் கண்டதில்லை.

கடந்த 2 வருடங்களுக்குள்  3 சந்தர்ப்பங்களில் உயர் நீதிமன்றத்துக்கு அரசியல்வாதிகளால் கண்ணத்தில் அரையப்பட்டிருக்கிறது. அதன் முதலாவது சந்தர்ப்பம் தான், மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரியின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அந்த தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 3பேரையும் பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைத்து, அவர்கள் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சபாநாயகரால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இரணடாவதாக, பால்நிலை சமத்துவ சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கிய சந்தர்ப்பத்தில், அந்த தீர்ப்பு தொடர்பாகவும் பாராளுமன்ற சிறப்புரிமை குழுவை கூட்டி, அந்த தீர்ப்பு தொடர்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என தெரிவித்து, நீதிபதிகளையும் அதற்காக பணித்தார்கள்.

மூன்றாவது சந்தர்ப்பம்தான், உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பொன்று வழங்கிய பின்னர். அந்த தீர்ப்பு தொடர்பாக பிரதம நீதியரசருடன் அல்லது வேறு நீதியரசர்களுடன் கலந்துரையாடி இதனை தீர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்க  பிரதிவாதிக்கு முடியாது. அவ்வாறு தெரிவிப்பதற்கு முடியும் என நாங்கள் எந்த சட்டப் புத்தகத்திலும் கற்றுக்கொண்டதில்லை. அவ்வாறான சட்டம் இலங்கையில் மாத்திரம் அல்ல வேறு எங்கும் இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் நாங்கள் சட்ட மறுசீரமைப்பு மேற்கொண்டு அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எமது சிந்தனை நிறைவேறுமா? இந்த பிரச்சினைகளுக்கு நாங்கள் முகம்கொடுக்க நேரிடும். இது நாட்டில் இருக்கும் அனைத்து பிரஜைகளும் முகம்கொடுக்க வேண்டி ஏற்படுகின்ற சவாலாகும்.

அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் வருடத்துக்கு 600க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. இதில் அதிகமான வழக்குகள் நிறைவேற்று அதிகாரியால் அல்லது அவரின் பிரதிநிதி வழியால் அடிப்படை உரிமை மீறப்பட்டமை தொடர்பில், அதாவது அரச சேவையாளர்களால் அல்லது அமைச்சர்களால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து உயர் நீதிமன்றம்  பல வழங்குகளுக்கு தீர்ப்பளித்திருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகளுக்கு பல்வேறு வழக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அந்த தீர்ப்புகளில் அவர்கள் நட்டஈடு கொடுக்க வேண்டும் என்றோ அல்லது அரசாங்கத்தால் நட்டஈடு கொடுக்க வேண்டும் என்றோ தீர்ப்பளிக்கப்படுகிறது. இவ்வாறான நபர்களை மீண்டும் அரச சேவைக்கோ, பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ பொலிஸ் அதிகாரியாகவோ பொலிஸ்மா அதிபராக சேவையில் வைத்துக்கொள்வது பொருத்தமா என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறான நிலைமையில்தான் பொலிஸ்மா அதிபர் தொடர்பாகவும் உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவொன்றை வழங்கி இருக்கிறது.

அதேபோன்று நாட்டின் பொருளாதார வீழ்ச்சுக்கு காரணமாணவர்கள் என உயர் நீதிமன்றம் அதற்கு பாெறுப்பு கூறவேண்டியர்கள் என அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் சிலரை பெயரிட்டிருக்கிறது. அவர்களால் நாட்டுக்கு 493 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நட்டஈட்டை இவர்களிடமிருந்து பெற்றுக்கொடுக்க முறையான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்றால், அதற்கு தேவையாக சட்டங்களை இயற்றி, நீதிமன்ற தீர்ப்பை செயற்படுத்த வேண்டிய வகையில் சட்ட மறுசீரமைப்பு செய்ய வேண்டி இருக்கிறது என்றார்.