ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதில்லை என்ற பொதுஜன பெரமுனவின் தீர்மானம் மூலம் ராஜபக்ஷ்வினரை ரணில் பாதுகாக்கிறார் என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு புஸ்வாணமாகியுள்ளது.
ரணில் ராஜபக்ஷ் என்ற பிரசாரமும் பொய்யாகியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜயமான்ன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவர்களின் வேட்பாளர் ஒருவரை நியமிக்க்க தீர்மானித்துள்ளது.
இவர்களின் இந்த தீர்மானம் மூலம் எதிர்க்கட்சியினர் இதுவரை காலமும் ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ்வினரை பாதுகாத்து வருகிறார். ரணில் ராஜபக்ஷ் என்றே எமக்கு எதிராக பிரசாரம் செய்துவந்தார்கள்.
ஆனால் தற்போது பொதுஜன பெரமுனவின் தீர்மானம் மூலம் இதுவரை காலமும் எமக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தெரிவித்துவந்த குற்றச்சாட்டு தற்போது புஸ்வாணமாகியுள்ளது. ராஜபக்ஷ்வினரை ரணில் விக்ரமசிங்க பாதுகாக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
ரணில் விக்ரமசி்ங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சியும் சாராத சுயாதீன, தூய்மையான வேட்பாளராகவே போட்டியிட உள்ளார்.
தேர்தல் பிரசாரங்களில் எதிர்க்கட்சியினருக்கு ரணில் ராஜக்ஷ் என்ற பிரசாரத்தை முன்னெடுக்க முடியாத வகையில் பொதுஜன பெரமுனவின் தீர்மானம் அமைந்துள்ளது. இதனையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
மேலும், கோத்தாபய ராஜபக்ஷ்விடம் இருந்து எங்களுக்கு படிப்பினை இருக்கிறது. அனுபவம் இல்லாத ஒருவருக்கு அரசாங்கம் ஒன்றை ஆட்சி செய்ய முடியாது.
அரசியல் அனுபவம் இல்லாத ஒருவரை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் மூலம் நாடு எந்த நிலைக்கு தள்ளப்பட்டது என்பது மக்கள் அறிவார்கள்.
தனி ஒரு மனிதனாக முன்வந்து, வங்குராேத்து அடைந்திருந்த நாட்டை இயல்புநிலைக்கு கொண்டுவந்த பெருமை ரணில் விக்ரமசிங்கவுக்கே இருக்கிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அரசியல் அனுபவமும் சர்வதேச தொடர்புகளும் இருக்கும் தலைவர் ரணில் விக்ரமசிங்கவாகும்.
அதேநேரம் பொதுஜன பெரமுன அவர்களின் வேட்பாளர் ஒருவரை நியமிக்க தீர்மானித்துள்ளபோதும் அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் உள்ளிட்ட 80 வீதமானவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.இவ்வாறு ஏனைய கட்சிகளில் இருந்தும் பலர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வருவருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
ஏனெனில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை ரணில் விக்ரமசிங்க கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே தற்போதுள்ள நிலையில் நாட்டை கட்டியெழுப்ப முடியும். இவ்வாறான நிலையில் புதிய ஒருவரை நியமிப்பதால் நாடு இருந்ததைவிட வீழ்ச்சியடையும் அபாயம் இருக்கிறது என்றார்.