பிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2024.

86 0

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை 29 ஆவது வருடமாக நடாத்திய தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2024 இன் இறுதிப்போட்டிகள் பிரான்சு சார்சல் நெல்சன் மண்டேலா விளையாட்டுத்திடலில் நேற்று (28.07.2024) ஞாயிற்றுக்கிழமை மிகவும் எழுச்சியாக நடைபெற்று முடிந்தது.

கடந்த 20.07.2024 சனிக்கிழமை , 21.07.2024 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 27.07. 2024 சனிக்கிழமை ஆகிய தினங்களில் தெரிவுப் போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில் நேற்று (28.07.2024) ஞாயிற்றுக்கிழமை மாபெரும் இறுதிப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன.சார்சல் நெல்சன் மண்டேலா மைதானப் பகுதியில் அமைந்திருக்கும் தமிழீழ விடுதலை புலிகளில் முதற்களப்பலியான லெப்.சங்கர் ஞாபகார்த்த நினைவுத்தூபி முன்பாக காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஆரம்ப வணக்க நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. ஈகைச்சுடரினை சார்சல் தமிழ்ச்சங்க‌ பரப்புரைப் பொறுப்பாளர் திரு.செல்லையா கணபதிப்பிள்ளை அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். திடலில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இளையோர் அமைப்புப் பொறுப்பாளர் செல்வி பாக்கியநாதன் அர்சிதாயினி அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுக்கொடியை சார்சல் மாநகரசபை உறுப்பினர் M. Christian Seranot (Conseiller municipale de Sarcelles) ஏற்றிவைக்க , தமிழீழத் தேசியக் கொடியை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு.கிருபா அவர்கள் ஏற்றிவைத்தார்.
மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை 1995 ஆம் ஆண்டு காங்கேசன்துறையில் எடித்தாரா மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் நரேஷ் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து கழகங்களின் கொடிகளை கழகப்பொறுப்பாளர்கள் சமநேரத்தில் ஏற்றிவைத்தனர்.ஒலிம்பிக் தீபத்தை மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் மெய்வல்லுநர் போட்டித் தலைவன் பாலசுப்பிரமணியம் ரிசி மற்றும் மெய்வல்லுநர் தலைவி தமிழ்ச்செல்வன் பானுசா ஆகியோரிடம் ஒப்படைத்தார். இருவரும் கழக வீரர்களுடன் மைதானத்தை வலம்வந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து வீரர்கள், நடுவர்கள் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றதையடுத்து போட்டிகள் ஆரம்பமாகின. வீரர்களின் சார்பில் பாலசுப்பிரமணியம் ரிசி அவர்களும் நடுவர்களின் சார்பில் போட்டிச் செயலாளர் திரு.புத்திசிகாமணி இலங்கேஸ்வரன் அவர்களும் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். தமிழர் வி.க. 93, தமிழர் வி.க. 94, தமிழர் வி.க. 95, யாழ்டன் வி.க., நல்லூர்ஸ்தான் வி.க., அரியாலை ஐக்கிய கழகம், வட்டுக்கோட்டை வி.க. ,ஈழவர் வி.க. எவ்.சி.நெவ் துறுவா.வி.க. ஆகிய கழகங்களிடையே விறுவிறுப்பாக போட்டிகள் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து கழக வீரர்களின் அணிநடை அணிவகுப்பு சிறப்பாக அமைந்திருந்தது. அணிவகுப்பு மரியாதையினை பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்ட 95 பிரிவின் மாநகரசபை உறுப்பினர்கள், M. Christian Seranot Conseiller municipale de Sarcelles,Mme Anissat Djounaid, conseillère municipale de Sarcelles, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மயில்ராசன், தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினரும் உதவிப்போட்டி முகாமையாளருமான திரு.பீலிக்ஸ், தமிழ்ச்சோலை தலைமை பணியக பொறுப்பாளர் திரு.நாகஜோதீஸ்வரன்,தமிழ்ச்சோலை தலைமை பணியக முன்னாள் பொறுப்பாளர் திரு‌.ஜெயக்குமார். சார்சல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.மத்தியாஸ் டக்ளஸ் சார்சல் தமிழ்ச்சங்க பரப்புரை பொறுப்பாளர் திரு.செல்லையா கணபதிப்பிள்ளை. மாவீரர் பணிமனை துணைப் பொறுப்பாளர் பாக்கியநாதன் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப்போட்டிகளின் இறுதிப்போட்டிகளும் குறித்த பகுதியில் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. உதைபந்தாட்டத்தின் இறுதிப்போட்டிகளில் சென் பற்றிக்ஸ் அணியும் ஈழவர் வி.க. அணியும் விறுவிறுப்பாக மோதியமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியில் சென்பற்றிக்ஸ் அணி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது. அணிநடை அணிவகுப்பில் யாழ்ட்டன் வி.க. மற்றும் 94 வி.க. ஆகியன முதலிடத்தையும் நல்லூர்ஸ்தான் வி.க. மூன்றமிடத்தையும், தமிழர் வி.க. 93 நான்காமிடத்தையும் தமிழர் வி.க. 95 ஐந்தாம் இடத்தையும் வட்டுக்கோட்டை வி.க.ஆறாம் இடத்தையும் தமதாக்கிக்கொண்டன. தொடர்ந்து வெற்றிபெற்ற கழகங்களுக்கும் வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணமும் பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

95 வல்துவா பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினர் Carlos Martens Bilongo அவர்களும் 95 பிரிவின் மாநகரசபை உறுப்பினர்கள், M. Christian Seranot Conseiller municipale de Sarcelles,Mme Anissat Djounaid, conseillère municipale de Sarcelles, ஆகியோரும் வெற்றிக்கிண்ணம், பதக்கம் வழங்கிவைத்து வீரர்களை வாழ்த்தி தமது உணர்வினை வெளிப்படுத்தியிருந்தனர். நிகழ்வின் ஆரம்பம் முதல் இறுதிவரை திருமதி ராயினி, செல்வி சிவசுவேதினி நிகழ்வினைத் தமது அறிவிப்பின் ஊடாகக் கொண்டு சென்றிருந்தனர். அனைத்து செயற்பாட்டாளர்களும் தமது பணியினைத் திறம்பட செய்திருந்தமை பாராட்டத்தக்கது.

பிரான்சில் நடைபெற்று முடிந்திருந்த தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2024 சிறப்பாகவே கடந்த காலங்கள் போன்று நிறையவே போட்டியாளர்கள், மக்கள் செயற்பாட்டாளர்கள், கழகங்களின் பங்களிப்புடன் நடைபெற்று முடிந்திருந்தது. பயிற்சிபெற்ற முதலுதவியாளர்கள் போட்டிகளில் பாதிப்புற்றவர்களுக்கான முதலுதவிகளைச் செய்து அவர்களை மீண்டும் போட்டிகளில் பங்குகொள்ள வைத்தனர். தமிழீழ உணவகம் குழந்தைகள், பெரியவர்கள் நலன் கருதி அவர்களுக்கு விரும்பிய உணவுகள் குளிர்பானங்களை நியாய விலையில் வழங்கியிருந்தனர். வெளியீட்டுப் பிரிவினரும் தமது வெளியீடுகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

தடகள விளையாட்டு, மற்றும் அனைத்து விளையாட்டுக்கள் என்ற அடிப்படையில் இரண்டு சுற்றுக் கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டன. அனைத்து விளையாட்டுக்களின் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடத்தை யாழ்ட்டன் விளையாட்டுக் கழகமும் இரண்டாமிடத்தை நல்லூர்ஸ்தான் வி.கழகமும் மூன்றாம் இடத்தை தமிழர் வி.க. 93உம் பெற்றுக்கொண்டன. தடகள விளையாட்டுக்களின் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடத்தை 626.5 புள்ளிகளைப்பெற்று யாழ்ட்டன் விளையாட்டுக்கழகமும் இரண்டாமிடத்தை 535 புள்ளிகளைப்பெற்று நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும் 490.5 புள்ளிகளைப்பெற்று மூன்றாம் இடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் 94 உம் பெற்றுக்கொண்டன. தமிழீழத் தேசியக்கொடி பிரெஞ்சுக் கொடி, கழகங்களின் கொடிகள் இறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுகண்டன.

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)