வெனிசுவேலாவில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மக்கள் மறுப்பு

39 0

வெனிசுவேலாவின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை எதிர்கட்சிகள் ஏற்க மறுத்துள்ளதை தொடர்ந்து அந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

ஜனாதிபதி தேர்தலிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கரகாசின் மத்திய பகுதியில் திரண்டுள்ளனர்.

தலைநகரை சூழவுள்ள மலைப்பகுதிகளில் காணப்படும் குடிசைகளில் இருந்து மக்கள் பல மைல் தூரம் நடந்து ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுதந்திரம் சுதந்திரம் என கோசம் எழுப்பிவருகின்றனர்.

அரசாங்கம் வீழ்ச்சியடைவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நெடுஞ்சாலைகளில் டயர்கள் எரிவதையும் பெருமளவு பொதுமக்களையும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து கண்ணீர் புகைபிரயோகம் இடம்பெறுவதையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

சில பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மதுரோவின் சுவரொட்டிகளை கிழித்து எறிந்துள்ளனர்.

பொலிஸாரும் இராணுவத்தினரும் அரசாங்கத்திற்கு ஆதரவான இடதுசாரி  ஆயுதக்குழுக்களும்  ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைநகருக்கான பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.

இது மிகமோசமான மோசடி நாங்கள் 70 வீத வாக்குகளால் வெற்றிபெற்றோம்,ஆனால் அவர்கள் தேர்தல்களை எங்களிடமிருந்து பறித்துக்கொண்டனர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

எங்கள் நாட்டிற்கும்  எங்கள் இளைஞர்களிற்கும் சிறந்த எதிர்காலம் வேண்டும் என ஒருவர் தெரிவித்துள்ளார்.