பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக உரிமை மீறல் விவகாரம்: திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு

57 0

சட்டப்பேரவைக்குள் குட்காகொண்டு வந்ததாக பிறப்பிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வந்தது தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.இந்த நோட்டீஸை உயர் நீதிமன்றம் தொடர்ச்சியாக இருமுறை ரத்து செய்திருந்த நிலையில், அதைஎதிர்த்து அதிமுக ஆட்சியில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் இருந்துவந்தது. இந்நிலையில் இந்தமேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டது: கடந்த 2017-ம்ஆண்டு அதிமுகவில் பிளவுஏற்பட்டு ஓபிஎஸ் அணி உருவானது. மறுபுறம் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக 18 எம்எல்ஏ-க்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டனர். இதனால் அப்போதைய முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதுபோன்ற அரசியல் காரணங்களால் ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அப்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவிவகித்த தற்போதைய முதல்வர்உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக அரசியல்காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டப்படி ஒரு ஆட்சியின் பதவிக்காலம் முடிந்ததும், சட்டப்பேரவையும் தானாகவே கலைந்து விடும். அப்போதே நிலுவையில் உள்ள மசோதாக்கள், உரிமை மீறல் தொடர்பான பிரச்சினைகள் என அனைத்து நடவடிக்கைகளும் காலாவதியாகி விடுகின்றன என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்போதுள்ள சட்டப்பேரவை இந்த குட்கா விவகாரம் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தமுடியாது. அரசியல் உள்நோக்கத்துடன் உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றமும் தலையிட முடியாது. உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை ஏற்கெனவே உயர் நீதிமன்றம் இருமுறை ரத்து செய்துள்ளது. எனவே இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு வாதிட்டார்.

அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ‘‘முந்தைய உரிமைக்குழுவின் பதவிக்காலம் முடிந்தாலும், நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் குறித்து கண்டிப்பாக பேரவைக்குஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்றார். அதற்கு திமுக தரப்பில், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘மசோதாக்கள் காலாவதியானாலும், உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கைகள் எப்படி காலாவதியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வர அனுமதிக்க வேண்டும்’’ எனக்கூறி இந்த வழக்கின் தீர்ப்பை நாளைக்கு தள்ளிவைத்துள்ளனர்.