தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது

76 0

தூத்துக்குடியில் உயிருக்கு பயந்து ஓடிய அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது ஜீரணிக்க முடியாத ஒன்று என போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு கொடுத்து வழக்கைமுடித்து வைத்தது நியாயமில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13பேர் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்தது. பின்னர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றிதிபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை கடந்தமுறை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, செல்வாக்குமிக்க முக்கிய நபர் ஒருவருக்காகவே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது என கருத்துதெரிவித்து, இந்த துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பும், பின்பும் இதில் தொடர்புடைய காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை இருவாரகாலத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த வழக்கில் தொடர்புடைய காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மாத அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது.

அதையேற்ற நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கினர்.

நியாயமான விசாரணை தேவை: பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு அரசு செயலர், தமிழக டிஜிபி உள்ளிட்டோரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அத்துடன், இந்த வழக்கில் சிபிஐ நடத்தியுள்ள விசாரணை ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்றும், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அதுபோல இல்லாமல் நியாயமாக நடத்தப்பட வேண்டும்என்றும், உயிருக்கு பயந்து ஓடியஅப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது ஜீரணிக்கமுடியாத ஒன்று என்றும், இந்தசம்பவம்போல இதற்கு முன்பாககேள்விபட்டதில்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்காகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்து வைத்தது நியாயமில்லை என்றும், போலீஸார் தங்களது தவறை உணர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

நீதிபதிகள் கவலை: கடந்த 2009 முதல் 2014 வரை எந்த அனுமதியுமின்றி அந்த தொழிற்சாலை செயல்பட்டுள்ளது. ஒரு தனிநபரின் கட்டுப்பாட்டில் அரசுஇயந்திரம் இயங்குவது என்பது சமூகத்துக்கு மோசமானது எனகவலை தெரிவித்த நீதிபதிகள், இப்போதும் அந்த தனிப்பட்ட நபர்கள் மீது அரசால் நடவடிக்கைஎடுக்க முடியாது. அனுமதியின்றி அந்த ஆலை செயல்பட்டது அரசுக்கு நன்றாக தெரிந்தும்ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகள் எல்லோரும் அப்போது எங்குஇருந்தார்கள் என கேள்வி எழுப்பி,விசாரணையை 3 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.