இலங்கையின் புதிய இராணுவத் தளபதி யார்?

272 0

இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது சேவை நீடிப்பு வரும் 2017 ஓகஸ்ட் 21ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையிலேயே அவர் ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தமது அதிகாரபூர்வ வாகனங்களை வரும் மே 16ஆம் திகதிக்குள் மீள ஒப்படைக்குமாறு இராணுவத் தளபதி, தனது அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

இலங்கையின் கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள எயர் சீவ் மார்ஸல் கோலித குணதிலக வரும் ஜூலை 16ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள நிலையில், கூட்டுப் படைகளின் தளபதி பதவியை, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.

கூட்டுப் படைகளின் தளபதியாக லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டால், இலங்கையின் அடுத்த இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மூன்றாவது சேவை நீடிப்புக்கு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா விண்ணப்பிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.