காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 10,000 மாணவர்கள் மற்றும் 400 ஆசிரியர்கள் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் காசா போர் தீவிரமடைந்து வரும்நிலையில், இஸ்ரேலிய இராணுவம் புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், மத்திய காசா பகுதியில் உள்ள புரேஜ் மற்றும் நுசிராத் அகதிகள் முகாம்களில் இருந்து பாலஸ்தீனர்கள் வெளியேறி வருகின்றனர். 86% காசா மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறிவிட்டனர் என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா கூறுகிறது.
காசாவின் இரண்டு முக்கிய தெற்கு நகரங்களான ரஃபா மற்றும் கான் யூனிஸ் ஆகியவற்றில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்த வண்ணம் உள்ளது என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு, அக்டோபர் 7 அன்று தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் போரில் 39,363 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 90,923 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களின் போது இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்.
காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, தற்போது வரை சுமார் 10,000 மாணவர்கள், 400 ஆசிரியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள 76 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகள் செயல்படுவதற்கு முழு புனரமைப்பு தேவை என்று ஐ.நா தெரிவித்துள்ளது.