க.வே பாலகுமாரனின் அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல் வெளியீட்டு நிகழ்வு -யேர்மனி ஸ்ருட்காட்.

709 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே. பாலகுமாரனின் தேர்ந்த எழுத்துகளின் தொகுப்பான பேசுவோம் போரிடுவோம்  என்ற நூல் வெளியீடு ஸ்ருற்காட் நகரத்தில் 28.07.2024 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ருற்காட் நகரில் வாழம் தமிழ் மக்களும் அதனை அண்டியுள்ள நகரங்களில் வாழும் தமிழ் மக்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். 15:20 மணிக்குத் தொடங்கிய விழா, பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றலுடன் தொடங்கி, மாவீரர் படத்துக்கு மலர் மற்றும் சுடர் வணக்கம் செய்யப்பட்டது.

சிறப்பு வருகையாளர்களான தமிழ்க் கல்விக் கழகத்தின் மூத்த உறுப்பினர் திரு. ஆறுமுகம் விவேகானந்தன், தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு.முல்லை ஜெயராஜா, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜமனோகரன்,  நூர்ன்பேர்க் கோட்டப் பொறுப்பாளர் திரு. கந்தையா கிட்டிணபிள்ளை, முன்சன் நகரப்பிரதிநிதி திரு. ஜெகநாதன் சுகுமார், ஸ்ருற்காட் சிறீசித்தி விநாயகர் கோவில் பொறுப்பாளர் திரு. சின்னத்தம்பி மகேஸ்வரன், கால்ஸ்றூகே நகரப் பிரதிநிதி திரு. ஜீவராஜா, ஸ்ருற்காட் நகரப்பிரதிநிதி திரு.மகாலிங்கம் கோணேஸ்வரன், ஸ்ருற்காட் தமிழாலய நிர்வாகி திருமதி மடோனா பற்றிக் குலேந்திரன், தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தனர்.

சிறப்புரைகளின் வரிசையில் வரவேற்புரையைத் தென்மாநிலப் பொறுப்பாளர் திரு. கனகையா சிறீகாந்தன் அவர்களும் க.வே. பாலகுமாரன் பற்றிய உரையைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தாயகநலன் திட்டப் பொறுப்பாளர் திரு. இராஜரட்ணம் ராஜன் அவர்களும் வாழ்த்துரையை திரு. ஆறுமுகம் விவேகானந்தன் அவர்களும் தொகுப்புரையைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் வாரிதி” திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களும் நிகழ்த்தினார்கள். நூல் வெளியீட்டுக்கான உரையை திரு. முல்லை ஜெயராஜா அவர்கள் நிகழ்த்திய பின், திரு.இராஜரட்ணம் ராஜன் அவர்கள் நூலை வெளியிட்டுவைக்க, அதன் முதற் பிரதியை ஸ்ருற்காட் முன்னாள் நகரப்பிரதிநிதி திரு.அமுதலிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் சிறப்புரையையும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் ஏற்புரையையும் நிகழ்த்தினார்கள். நிறைவாக வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தோருக்கு நூல்கள் வழங்கியதைத் தொடர்ந்து, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கை வீச்சுடன், விழாச் சிறப்புற நிறைவுபெற்றது.