பொலிஸ்மா அதிபரின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியும்

34 0

பொலிஸ்மா அதிபரின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரொருவரை பொலிஸ் ஆணைக்குழு அல்லது அரச சேவை ஆணைக்குழுவால் நியமிக்க முடியும். தற்போது தேர்தலுக்கான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதால் ஜனாதிபதி தேர்தலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் நடத்தப்படும்போது அது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டாலும், தேர்தலுக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரையே அந்த அறிவித்தல் சென்றடையும். தற்போது அவ்வாறானதொரு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அடிப்படை செயற்பாடுகளை முன்னெடுப்பதில் எவ்வித தடையும் ஏற்படாது.

தற்போது பொலிஸ்மா அதிபர் தன் கடமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே பதில் பொலிஸ்மா அதிபரொருவரை நியமிக்க முடியாது என்பது அரசாங்கத்தின் வாதமாக உள்ளது. ஆனால், தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அதற்கான அதிகாரியொருவரை நியமிக்க முடியும்.

அந்த நியமனத்தை பொலிஸ் ஆணைக்குழுவுக்கோ, அரச சேவை ஆணைக்குழுவுக்கோ வழங்க வேண்டும். அவ்வாறில்லை என்றால் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து தேவையேற்படின் தேர்தல் கடமைகளை செய்வதற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியும். அவ்வாறில்லை என்றால் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக தேவையான ஆலோசனைகளை வழங்க முடியும்.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் பணிக்கமர்த்தப்பட்டால் மாத்திரமே சிக்கல் ஏற்படும். எவ்வாறிருப்பினும் செயலாளர்கள் ஊடாக பணிகளை முன்னெடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு முடியும். எனவே பொலிஸ்மா அதிபர் விவகாரம் தேர்தலுக்கு தடையாகாது. இதனால் தடை ஏற்படும் என்று காண்பிக்க முயற்சிப்பவர்களும், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எண்ணுபவர்களும் மக்களின் உரிமையை முடக்கவே முயற்சிக்கின்றனர் என்றார்.