கிளிநொச்சி கனகாம்பிகை குளம் ஆக்கிரமிப்பு

76 0

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பிரதேச கமக்கார அமைப்பு போன்ற பொது அமைப்புக்கள், நீர்ப்பாசன பொறியியலாளர் போன்ற அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளன. இருப்பினும், இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கனகாம்பிகை குளத்தின் ஏ9 வீதியோடு உள்ள பகுதி மண் நிரப்பப்பட்டு அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ளது. 10 கொள்ளளவு கொண்ட இக்குளத்தினை நம்பி சுமார் 300 வரையான சிறுதானிய பயிர்ச்செய்கையாளர்கள் வாழ்கின்றனர்.

எனவே குளம் ஆக்கிரமிக்கப்படும்  நிலைமையானது எதிர்காலத்தில் இக்குளத்தினை நம்பியுள்ள விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிடும்.

ஏற்கனவே இக்குளத்துக்கு சொந்தமான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 20 ஏக்கர் வரையான நிலம் பொது மக்களால் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளின் கவனத்துக்குச் கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக குளத்தின் பல பகுதிகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தற்போது இடம்பெற்றுள்ள குளத்தின் முக்கிய பகுதி ஆக்கிரமிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் உடனடியாக அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கிளிநொச்சி கிழக்கு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் எந்திரி கை.பிரகாஸ் கரைச்சி பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு இக்குளத்தின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துமாறு கடிதங்களை எழுதியுள்ளார்.

எனவே, இவ்விடயம் தொடர்பாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரை தொடர்புகொண்டு வினவிய போது, இவ்விடயம் தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் ஆக்கிரமிப்பு பற்றி உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.