சிவகங்கையில் இருக்கையை எடுத்து பெண் அதிகாரியை தாக்க முயன்ற திமுக பிரமுகர்: ஊழியர்கள் போராட்டம்

43 0

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் அதிகாரியை, இருக்கையை தூக்கி வீசி திமுக பிரமுகர் தாக்க முயன்றார். இதைக் கண்டித்து, ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை அருகேயுள்ள சித்தலூரைச் சேர்ந்தவர் முருகன். திமுக பிரமுகரான இவர், ஒப்பந்ததாரராக உள்ளார். பெருங்குடி ஊராட்சியில் ரூ.10 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட முருகன், பணி முடிந்துவிட்டதாகவும், பணத்தை விடுவிக்குமாறும், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரியிடம் நேற்று கேட்டுள்ளார்.பணி அனுமதி உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வருமாறு உதவிப் பொறியாளர் தெரிவித்ததால், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முருகன், அருகே இருந்த இருக்கையை எடுத்து, கிருஷ்ணகுமாரியைத் தாக்க முயன்றார்.

இதை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து, ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரியைத் தாக்க முயன்ற முருகனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இது தொடர்பாக சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கிருஷ்ணகுமாரி புகார் கொடுத்தார்.

அடுத்தகட்ட போராட்டம்… இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் “ராதாகிருஷ்ணன் கூறும்போது, அதிகாரியைத் தாக்க முயன்ற விவகாரம் தொடர்பாக போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளோம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநில நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து, அடுத்தகட்டப் போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.