கனேடிய பிரதமரின் ‘இனப்படுகொலை’ குற்றச்சாட்டை நிராகரித்தது இலங்கை

31 0

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் முன்வைக்கப்பட்ட ‘இனப்படுகொலை’ குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு, கனடாவில் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் முன்வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான அமைதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கு ஒருபோதும் உதவாது எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘கறுப்பு ஜுலை’ கலவரங்கள் அரங்கேறி கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. ஒரு வாரத்துக்கும் மேல் நீடித்த இக்கலவரங்களின் மிக மோசமான தாக்கத்தையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைவுகூர்ந்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அவ்வறிக்கையில் ‘இற்றைக்கு 41 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழ் மக்களையும், அவர்களின் வர்த்தக நிலையங்களையும் இலக்குவைத்து வன்முறைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியானதுடன், பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் காயமடைந்தனர். அத்தோடு பலர் பாலியல் வன்முறைகளுக்கு இலக்கானதுடன், நாட்டை விட்டு வெளியேறவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகினர்.

‘கறுப்பு ஜுலை’ என அறியப்படும் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நாட்டின் அமைதியின்மையை தோற்றுவித்ததுடன், பல தசாப்தகால போருக்கும் வழிவகுத்தது. இது இலங்கையின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும்’ என கனேடியப் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுமாத்திரமன்றி இவ்வாறான மிக மோசமான வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மற்றும் தப்பிப்பிழைத்தவர்களை நினைவுகூருவதில் கனேடியத் தமிழர்கள் மற்றும் உலகவாழ் தமிழர்களுடன் தாம் உடன்நிற்பதை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியை ‘தமிழினப் படுகொலை நினைவு நாளாக’ பிரகடனப்படுத்துவதற்கான தீர்மானம் கனேடியப் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் வருடாந்தம் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்றும், ஜூலை மாதம் 23ஆம் திகதி கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூரும் தினத்தன்றும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் வெளியிடப்படும் அறிக்கைகளில் பயன்படுத்தப்படும் ‘இனப்படுகொலை’ என்ற சொற்பதத்தை நிராகரித்து மறுப்பு அறிக்கை வெளியிட்டுவரும் வெளிவிவகார அமைச்சு, இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை எனவும் கூறிவருகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் இம்முறையும் அத்தகையதொரு மறுப்பு அறிக்கையை வெளியிட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் கடந்த 23ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை முற்றாக நிராகரிப்பதாக அதில் தெரிவித்திருக்கிறது.

அத்தோடு இவ்விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து இதற்கு முன்னரும் கனேடிய பிரதமருக்குத் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் ‘கனடாவில் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் முன்வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான அமைதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கு ஒருபோதும் பங்களிக்காது’ எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.