கர்நாடக அரசு எங்கு அணை கட்டினாலும் எதிர்ப்போம்: மத்திய அமைச்சரை சந்தித்த பிறகு துரைமுருகன் தகவல்

26 0

 காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர், கர்நாடக முதல்வருடன் பேச மாட்டார். காவிரியில் கர்நாடக அரசு எங்கு அணை கட்டினாலும் எதிர்த்தே தீருவோம் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீரை தர மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவை காவிரி தொடர்பாக அளிக்கும் உத்தரவுகளையும் கர்நாடக அரசு மதிப்பதில்லை.இந்நிலையில், காவிரியில் உரிய நீரை பெற தமிழக அரசு தற்போது சட்டரீதியான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதற்கிடையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கர்நாடக அணைகள் நிரம்பி உபரிநீர் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில், காவிரியில் உரிய நீரை பெற தமிழக அரசு தற்போது சட்டரீதியான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதற்கிடையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கர்நாடக அணைகள் நிரம்பி உபரிநீர் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறை செயலர் க.மணிவாசன் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். டெல்லியில், நேற்று மாலை, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்தனர். டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும் உடன் இருந்தார். சந்திப்பின்போது, காவிரி விவகாரம், மேகேதாட்டு அணை விவகாரம், முல்லைப்பெரியாறு, காவிரி – குண்டாறு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: காவிரி விவகாரத்தை அமைச்சரிடம் தெளிவாக எடுத்து கூறினோம். மத்திய அமைச்சரும் கேட்டுக் கொண்டார். ஆனால், அவர் என்ன பதில் அளித்தார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இந்தியில் பேசினார். இணை அமைச்சர் போபண்ணாவும், பிஹாரைச் சேர்ந்த அமைச்சரும் இந்தியில் தான் பேசினர். நீர்வளத்துறை செயலரும் தெளிவாக விளக்கி கூறினார். அவர்களுக்கு எந்த அளவுக்கு புரிந்திருக்கும் என்பது தெரியவில்லை.

அப்போது நான், இது ஒரே நாளில் கற்றுக் கொள்ளும் விஷயம் அல்ல, இன்றே நாங்கள் உங்களை முடிவெடுக்க கூறவில்லை. பிரச்சினை வரும் போதெல்லாம் நாங்கள் வருவோம். தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதை தற்காலிக நிவாரணமாகத்தான் ஒப்புக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளோம்.

மேலும், நடுவர் மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்புக்குப்பின்னர், எந்த ஆண்டும் சரியாக அதில் வழங்கியுள்ள அட்டவணைப்படி கர்நாடக அரசு தண்ணீர் தந்ததே இல்லை. இது மிகப்பெரிய பிரச்சினை என்பதையும் வலியுறுத்தினோம்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தை தெளிவாக தெரிவித்தோம். உச்சநீதிமன்றம் 150 அடி நீரை தேக்கவும், அணையை பலப்படுத்தும் படியும் தெரிவித்தது. பேபி அணையை பலப்படுத்தினால்தான், முல்லைப்பெரியாறை பலப்படுத்த முடியும். பேபி அணையின் முன் உள்ள மரங்களை அவர்கள் வெட்டவில்லை. தற்போது அணையை சீரமைக்க வாகனம் அல்லது படகில் செல்லவும் விடவில்லை. இதுகுறித்தும் தெரிவித்தோம்.

காவிரியில் கர்நாடக அரசு எங்கு அணை கட்டினாலும் நாங்கள் எதிர்த்தே தீருவோம். கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் சந்திக்க மாட்டார். 38 தடவை பேசி, இனி பேசுவதால் எந்த பயனும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தை நாடி, நடுவர் மன்றம் வந்தது. தற்போதும் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இப்போது பேச்சுவார்த்தை நடத்தினால் அவர்கள், நீதிமன்றத்தில் பேசித்தீர்ப்பதாக கூறிவிடுவார்கள் எனவேதான் பேசவில்லை. சட்டப்படி இந்தவிவகாரத்தில் நடவடிக்கை எடுக்கிறோம்.

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.6,000 கோடி செலவாகும். தமிழக அரசு செலவழித்த தொகை போக மீதமுள்ள தொகையை கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.