4 வழிச்சாலை விரிவாக்கப் பணியில் விக்கிரவாண்டி – சேத்தியாதோப்பு திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் ரத்து

30 0

சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணியில், விக்கிரவாண்டி – சேத்தியாதோப்பு இடையிலான திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புது டெண்டர் கோரப்படவுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாமக செய்தி தொடர்பாளரும், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவைத் தலைவருமான வழக்கறிஞர் கே.பாலு உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, சேத்தியாதோப்பு, சோழபுரம் வழியாக கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் செல்லும் சாலை மிகமோசமான நிலையில் இருந்தது.

2017-ம் ஆண்டு இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, 2018-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. ஆனால், 7 ஆண்டுகளாக இந்த பணி முடிவடையாமல் நிலுவையில் இருந்துவருகிறது. எனவே, சாலை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி முடிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை சுங்கச் சாவடியில் நுழைவுக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில் நிலையறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில் சாலை விரிவாக்க திட்ட பொது மேலாளர் பி.செல்வகுமார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

தனியார் நிறுவன ஒப்பந்தம்: இந்த சாலை விரிவாக்கப் பணிகள் விக்கிரவாண்டி – சேத்தியாதோப்பு – சோழபுரம் – தஞ்சாவூர் என 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் இத்திட்டப் பணிகளை திட்டமிட்ட தேதிக்குள் முடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு இடையிலான 66 கி.மீ. விரிவாக்கப் பணிக்கான ஒப்பந்தம் ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருந்தது.

அந்த நிறுவனம் ஒப்பந்தப்படி கடந்த ஜூன் மாதத்துக்குள் பணிகளை முடித்து இருக்க வேண்டும். ஆனால், 47.85 சதவீத பணிகளை மட்டுமே முடித்துள்ளது என்பதால் அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் ரத்து செய்யப்பட்டு விட்டது. எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க புதிய நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கும் பணி நடந்து வருகிறது.

சேத்தியாதோப்பு – சோழபுரம் – தஞ்சாவூர் இடையிலான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த 4 வழிச்சாலைக்கான விரிவாக்கப் பணிகள் அனைத்தும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். இவ்வாறு பதில் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கடந்தஇரு தினங்களுக்கு முன்பாகநாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘விக்கிரவாண்டி – சேத்தியாதோப்பு இடையேயான சாலை விரிவாக்கப் பணிகள் இன்னும் ஓராண்டுக்குள் நிறைவடையும்’’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.