தேயிலை கைத்தொழிலில் புதிய முன்னேற்றங்கள் அவசியம்

27 0

ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த, இலங்கை தேயிலை கைத்தொழிலை அனைத்து பரிமாணங்களிலும் ஊக்குவித்தல் இன்றியமையாதது எனவும் இதற்கான முறையான திட்டம் அரச மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“சிலோன் டீ” உலகின் முன்னணி வர்த்தக நாமமாகத் திகழ்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, புதிய மூலோபாய வேலைத்திட்டத்தின் ஊடாக அதனை மேலும் ஊக்குவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் இன்று (25) ஆரம்பமான “கொழும்பு சர்வதேச தேயிலை மாநாட்டின்” ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கமும் இலங்கை தேயிலை சபையும் இணைந்து “தேயிலை – ஒரு வாழ்க்கை முறை மற்றும் வாழ்வாதாரம்” என்ற தொனிப்பொருளில் இரண்டு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையில் உள்ள தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் அது தொடர்பான வர்த்தகங்களின் கண்காட்சியும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை, கென்யா, சீனா, இந்தியா, ஜப்பான், பிரித்தானியா, வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள், நிபுணர்கள், முன்னணி வர்த்தக நாமங்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றன.

நம்நாட்டு தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புள்ள பல வர்த்தகங்களின் கண்காட்சிகளும் இதனுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு தேயிலை வர்த்தகச் சங்கத்தின் தலைவர் சஞ்சய் ஹேரதினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விசேட நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”கடந்த நான்கு வருடங்களில் நாங்கள் செய்த பணிகளை நான் நினைவு கூற வேண்டியதில்லை. ஆனால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்காக மேலும் அதிகமாக அந்நியச் செலாவணி தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவேதான் அடுத்த தசாப்தத்தில் நாட்டை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடையும் இலக்கை எட்டிய மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை அடிப்படையாகக் கொண்ட அதிக போட்டி நிறைந்த பொருளாதாரமாகவும் இருக்க வேண்டும். இன்று விவாதிக்கப்படும் இந்த சட்டமூலத்தில் அதனுடன் தொடர்புடைய கோட்பாடுகள் மற்றும் நிறுவனக் கட்டமைப்பு ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கு பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். நாட்டை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவதில் தேயிலை கைத்தொழிலுக்கும் பெரும் பங்கு உள்ளது. தேயிலை உட்பட எமது பெருந்தோட்டக் கைத்தொழில், 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்திலிருந்து நவீன பொருளாதாரமாக எம்மை மாற்றியது. தேயிலை கைத்தொழில் இல்லையென்றால் இன்று இந்நாட்டில் நவீனமயப்படுத்தல்கள் ஏற்பட்டிருக்காது. தேயிலை தொழில் இல்லாவிட்டால் ‘எல்ல’ பிரதேசம் சுற்றுலாத்தலமாக மாறியிருக்காது.

நாங்கள் இப்போது மற்றொரு விசேட கட்டத்தில் இருக்கிறோம். இங்கே நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும். 30 – 40 வருடங்களாக நிலம் மற்றும் தோட்டம் மூலம் பெறக்கூடிய வருமானத்தை இழந்த நாடாக மாறிவிட்டோம். அந்த வருமானத்தை மீளப் பெற தோட்டத்தையும் நாட்டையும் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

அதிக வருமானத்தை பெறுவதில் கவனம் செலுத்தியுள்ள சிறிய தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் ஆகிய இரண்டு துறைகளிலும் முன்னேறும் விவசாய வர்த்தகம் எமக்கு அவசியம். இரண்டு தனித்துவமான கட்டங்கள் இருப்பதோடு அவற்றில் முதலாவது சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதாகும். கடந்த பொருளாதார நெருக்கடியின் போது மிகவும் பாதிக்கப்பட்ட மக்களில் பெருந்தோட்ட மக்களும் உள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அத்துடன், பெருந்தோட்டம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போதுள்ள அனைத்து லயன் அறைகளையும் அரசாங்கம் கையகப்படுத்தி கிராமங்களாக மாற்றுவதற்கு மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். அப்போது பெருந்தோட்ட வளர்ச்சியுடன் லயன் அறைகள் என்ற கருத்து ஒழிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

வட மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை விட நுவரெலியா பகுதியில் பல பரிமாண வறுமை குறிகாட்டிகள் மிக அதிகமாக உள்ளது. எனவே, இந்த பிரச்சினையில் நாம் முதன்மையான கவனம் செலுத்த வேண்டும். மேலும், இந்த நேரத்தில் சில நிறுவனங்கள், குறிப்பாக சிறிய அளவிலான நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடன் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பதில் சிக்கல் உள்ளது.

மேலும், ரஷ்ய சந்தைக்கான பிரவேசம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் அவர்களை எந்த வகையிலும் பின்னோக்கித் தள்ளவில்லை. அவர்கள் எப்படியோ ஆசியாவிற்கு வந்துள்ளார்கள்.

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யப் எதிர்பார்த்துள்ள நாடுகளுக்கு புதிய நோக்கு தேவை என்பதுதான் பிரச்சினை. ஆனால் அதற்கு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை, ரஷ்யாவிற்கு உங்கள் தேயிலையை அனுப்புவதற்கு உங்களுக்கு உரிய வழிகளைப் பயன்படுத்த வேண்டும்.

எமது நாட்டில் சிறு தோட்ட உரிமையாளர்கள் அதிகளவில் உள்ளனர், அவர்கள் மூலம் தோட்டத் தொழில்துறையை எவ்வாறு விவசாய வர்த்தகமாக மாற்றுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் தேயிலையை மட்டும் பயிரிடுகிறோமா அல்லது உங்கள் பகுதிகளில் ஸ்மார்ட் விவசாயத்திற்கு இடமளிக்கிறோமா என்று தீர்மானிக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் விவசாய வர்த்தகத்தின் வளர்ச்சிக்காக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காணிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம். அதைப் பற்றி கண்டறிய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

எமது சில நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. தேயிலை தொழிலில் இலங்கை முன்னணியில் இருக்கும் வரை அரசாங்கத்திற்கு பிரச்சினை இல்லை. அதனை நாம் முன்னேற வேண்டும். தேயிலை சந்தையில் இலங்கை ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

இன்று தேயிலைக்கான கேள்வி என்ன, 80 – 90களில் பிறந்த (Millennials) மற்றும் Gen Z தலைமுறையினரின் தேவை என்ன, நீங்கள் இங்கு செய்துவரும் ஊக்குவிப்பு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தவிர, அந்த வேலைத்திட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவில்லை. நீங்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கவனம் செலுத்தி புதிய போக்குகளைத் தேட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

மேலும், நமது தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் பலப்படுத்தப்பட வேண்டும். அதற்காக அரசு மற்றும் தனியார் இணைந்து ஒரு வேலைத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகளை நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் தேயிலை தொழில்துறையின் புதிய ஊக்குவிப்பு மிகவும் முக்கியமானது. இந்த செயற்பாடுகளுக்கு அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.