வசிம் தாஜூதீன் கொலை – தனியார் உளவாளியின் தகவல்கள் தொடர்பில் சிசேட கவனம்

264 0

றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீன் கொலை தொடர்பில் தனியார் உளவாளி வழங்கிய இரகசிய தகவல்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் இன்று இதனை நீதிமன்றில் தெரிவித்தார்.

இதுதொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்;டது.

இதன்போது, தனியார் உளவாளிகளின் தகவல்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக மேலதிக மன்றாடியார் நாயகம் டிலான் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதுபோல் கொலை செய்யப்பட்ட தாஜூதீனின் கடனட்டையை உபயோகித்து யாரேனும் பணம் பெற்றுக்கொண்டுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்..

அதுபோல் தாஜூதீன் கொலை செய்யப்பட்ட தினத்தில் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்ற வாகனம் ஒன்று தொடர்பில் தயார் செய்யப்பட்ட அறிக்கையில் இருந்து சில தாள்கள் நீக்கப்பட்டிருப்பதாக, சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குற்ற விசாரணை திணைக்களம் இன்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்தது.

றகர் வீரர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீன் நாரஹேன்பிட்டி ஷாலிகா விளையாட்டரங்குக்கு அருகில் உள்ள வீதியில் மகிழுர்ந்து ஒன்றுக்குள் இருந்து 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

வாகன விபத்தில் அவர் பலியானதாக முதலில் தெரிவிக்கப்பட்ட போதும், அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் சாட்சியை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அனுர சேனானாயக்க இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் மீண்டும் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.