பலஸ்­தீன தேசிய ஒற்­றுமை, யுத்­தத்­தின்பின் காஸா ஆட்சி தொடர்பில் ஃபத்தா, ஹமாஸ் உட்­பட 12 பலஸ்­தீன அமைப்­புகள் சீனாவில் ஒப்­பந்தம்

31 0

பலஸ்­தீ­னத்தின் தேசிய ஒற்­று­மைக்­காக இணைந்து செயற்­ப­டு­வ­து தொடர்பில் ஃபத்தா உட்­பட ஏனைய பலஸ்­தீன அமைப்­பு­க­ளுடன் சீனாவில் தான் ஒப்­பந்­த­மொன்றில் கைச்­சாத்­திட்­டுள்­ள­தாக ஹமாஸ் இயக்கம் நேற்று அறி­வித்­தது. 

பெய்­ஜிங்கில் கையெ­ழுத்­தி­டப்­பட்ட இந்த ஒப்­பந்தம், யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் காஸாவை எவ்­வாறு ஆட்சி செய்­வது என்­பது தொடர்­பா­னது என சீனா தெரி­வித்­துள்­ளது.

இந்த ஒப்­பந்­தத்­துக்­காக, ஹமாஸின் சிரேஷ்ட தலை­வர்­களில் ஒரு­வ­ரான மூசா அபு மர்சூக்,  பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸின் ஃபத்தா கட்சியின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் அலோல் மற்றும் மேலும் 12 பலஸ்­தீன குழுக்­களின் பிர­தி­நி­திகள் சீனா­வுக்குச் சென்­றி­ருந்­தனர்.

இந்த ஒப்­பந்தம் குறித்து சீன வெளி­வி­வ­கார அமைச்சர் வாங் யீ கூறு­கையில், காஸா யுத்­தத்தின் பின்னர் இடைக்­கால தேசிய நல்­லி­ணக்க அர­சாங்கம் ஒன்றை ஸ்தாபிப்­ப­தற்கு இக்­கு­ழுக்கள் இணைங்­கி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

ஹமாஸின் மூசா அபு மர்சூக் இது தொடர்­பாக கூறு­கையில், “தேசிய ஒற்­று­மைக்­கான ஒப்­பந்­தத்தில் இன்று நாம் கையெ­ழுத்­திட்டோம். இப்­ப­ய­ணத்தை முழு­மை­யாக்­கு­வ­தற்­கான வழி­யா­னது தேசிய ஒற்­று­மை­யாகும் என நாம் கூறு­கிறோம். தேசிய ஒற்­று­மைக்கு நாம் உறு­தி­பூண்­டுள்ளோம். அதற்கு நாம் அழைப்பு விடுக்­கிறோம்” என்றார்.

கடந்த ஒக்­டோ­பரில் ஆரம்­ப­மான  இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் 9 மாதங்­களை கடந்­துள்ள நிலையில் இந்த ஒப்­பந்தம் குறித்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

பலஸ்­தீன விவ­காரம் தொடர்பில் தொடர்ச்­சி­யான ஆத­ரவு அளித்து வரு­வ­தற்­காக சீனா­வுக்கு நன்றி தெரி­விப்­ப­தாக ஃபத்தா அதி­காரி மஹ்மூத் அல் அலோல் கூறினார். பலஸ்­தீன மக்கள் அனை­வ­ரி­னதும் அன்பும் நட்பும் சீனா­வுக்கு உள்­ளது என அவர் கூறினார்.

சீன  வெளி­வி­வ­கார அமைச்சர் வாங் கருத்துத் தெரிவிக்கையில், நல்லிணக்கமானது பலஸ்தீன அமைப்புகளின் உள்ளக விவகாரம் எனவும், ஆனால் சர்வதேச சமூகத்தின் ஆதரவு இன்றி, அதை அடைய முடியாது எனவும் கூறினார்.