வட்டிவீதங்களைக் குறைத்தது மத்திய வங்கி

96 0

நாட்டின் பொருளாதாரத்தில் சமகாலத்தில் அவதானிக்கப்பட்ட குறிகாட்டிகளின் அடிப்படையில் வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கான வட்டிவீதங்களை முறையே 8.25 மற்றும் 9.25 சதவீதமாகக் குறைப்பதற்கு நாணயச்சபை தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.

நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான 4 ஆவது மீளாய்வுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி கடந்த மாதம் கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சி, அண்மைய வரி மறுசீரமைப்பை அடுத்து பணவீக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைந்தளவிலான தாக்கமே ஏற்பட்டமை, நிலையான பணவீக்க எதிர்பார்க்கைகள், குறைந்தளவிலான வெளிநாட்டுத்துறை அழுத்தங்கள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் கொள்கை வட்டி வீதங்களை 25 அடிப்படைப்புள்ளிகளால் குறைப்பதற்கு நாணயச்சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன முறையே 8.25 மற்றும் 9.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதுடன், நியதி ஒதுக்குவீதத்தை முன்னர் நிர்ணயிக்கப்பட்ட 2 சதவீத மட்டத்திலேயே தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் பிரகாரம் கடந்த ஜுனில் முதன்மைப் பணவீக்கமானது 1.7 சதவீதமாகப் பதிவானது. மின்சாரம், எரிபொருள், திரவப் பெற்றோலிய எரிவாயு போன்றவற்றின் விலைகள், கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சி இதற்குக் காரணமாக அமைந்தது.

அதேபோன்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்கள மதிப்பீடுகளின்படி நாட்டின் பொருளாதாரம் 5.3 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது. தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை, மேம்பட்ட நிரம்பல் நிலைமைகள், வெளிநாட்டுக்கேள்வி நிலைமையில் படிப்படியான மீளெழுச்சி, சுற்றுலாத்துறை மீட்சி போன்றவற்றின் காரணமாக நடுத்தர காலத்தில் உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு சுற்றுலாத்துறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பன மூலமான வருமானம் தொடர்ந்தும் நேர்மறையான மட்டத்தில் பதிவாகியிருக்கும் அதேவேளை, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 4.4 பில்லியன் டொலர்களாகப் பதிவான மொத்த வெளிநாட்டுக்கையிருப்புடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் கடந்த ஜுன்மாத இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 5.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளன.

இது இவ்வாறிருக்க சீன அபிவிருத்தி வங்கியுடனான கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளும், சர்வதேச பிணைமுறிதாரர்களுடன் இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னேற்றகரமான மட்டத்தில் இருப்பதாகவும், இருப்பினும் இதனுடன் தொடர்புடைய தகவல்கள் சந்தையில் உடனடித்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவற்றை வெளியிடமுடியாது எனவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

மேலும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கள் மந்தகரமான நிலையில் இருப்பினும், இவ்விடயத்தில் மத்திய வங்கி எவ்வகையிலும் தொடர்புபடவில்லை எனவும், மாறாக அரசாங்கம் இதுகுறித்து அவதானம் செலுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.