ஓய்வூதியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முரண்பாடான தீர்மானம்

21 0

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முரண்பாடான தீர்மானங்களினால் பாராளுமன்றமும், நாடும், ஓய்வூதிய சமூகத்தினரும் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (24)  விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2016 – 2020 காலப்பகுதியில் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பு தொடர்பான ஓய்வூதிய திருத்தம் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய  ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் நீக்கப்பட்டது. இதில் ஒரு இலட்சத்து பத்தாயிரத்திலிருந்து ஒரு இலட்சத்து இருபதாயிரம் வரையிலான ஓய்வூதியம் பெறுவோர் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இவர்களில் சுமார் 15,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பின் ஓய்வூதிய திருத்தம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட 241 ஓய்வூதியம் பெறுநர்கள் இணைந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பளப் பாக்கியோடு 2025-2026 ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவோருக்கு இந்த சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்க வேண்டிய சம்பள அதிகரிப்பு தொடர்பான ஓய்வூதிய திருத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழங்கிய பதிலையே அரசாங்கம் பாராளுமன்றத்திலும் தெரிவிக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் ஒரு பதிலையும் பாராளுமன்றத்தில் மற்றொரு பதிலையும் வழங்கியுள்ளது. இதனால், பாராளுமன்றமும், நாடும், ஓய்வுபெற்ற சமூகமும் தவறாக வழிநடத்தப்பட்டு வருகின்றனர்

ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பு தொடர்பான ஓய்வூதிய திருத்தம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எவ்வித உறுதியான தீர்மானத்தையும் எடுக்காதுள்ளது. ஆனால் ஓய்வூதியம் பெறுவோருக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியை நான்  திருத்தியமைத்துத் தருவேன் என்றார்.