22ஆவது திருத்தச் சட்டத்தின் செயற்பாடுகள் ஜனாதிபதி தேர்தலை பாதிக்காது – எம்.எம்.மொஹமட்

33 0

22ஆம் திருத்தச்சட்டத்தின் செயற்பாடுகள் ஜனாதிபதி தேர்தலை பாதிக்காது என்பதுடன் இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் என முன்னாள் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.மொஹமட் உள்ளிட்ட குழுவினர் நேற்று (23) மாலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமத் தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவனை சந்தித்து கலந்துரையாடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு திருத்தம் இப்பொழுது வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தாலும் அதன் பின்னர் அது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவேண்டும்.

அதன் பின்னர், 14 நாட்கள் எவருக்கும் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கான அவகாசம் வழங்கப்படவேண்டும்.

அவ்வாறு வழக்கு தொடுக்கப்பட்டால் அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு அதற்குரிய தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர், சிலவேளைகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படலாம் என்று இருந்தால் அந்த விதத்தில் நிறைவேற்றப்படலாம். அல்லது மூன்றில் இரண்டு வாக்குகளினாலும் நிறைவேற்றப்பட்டு மக்கள் தீர்ப்பினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற விடயம் முன்வைக்கப்பட்டால் அந்த விதத்திலும் நிறைவேற்றப்படலாம்.

முதலில் மூன்றில் இரண்டு வாக்குகள் பாராளுமன்றத்தில் கிடைக்க வேண்டும்.

அதன் பின்னர், மக்கள் தீர்ப்பளிக்கக்கூடிய தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியால் ஆணையிட முடியும். எனவே இந்தளவு நீண்ட நடைமுறையின் பின்னர் தான் மக்கள் தீர்ப்புக்கு செல்லுகின்ற தீர்மானம் எடுக்கப்படவிருக்கிறது. ஆனால், ஜனாதிபதி தேர்தல் பற்றிய அறிவிப்பினை இன்னும் 2,3 தினங்களில் தேர்தல் ஆணைக்குழு வெளியிடயிருக்கின்றது. எனவே என்னை பொறுத்தவரையில் 22ஆம் திருத்தத்தின் செயற்பாடு ஜனாதிபதி தேர்தலை பாதிக்காது என்றார்.