அட்டுலுகம முஸ்லிம் மக்களின் தியாகத்துக்கு கெளரவமளிக்க வேண்டும்

32 0

அட்டுலுகம வீதி அபிவிருத்திக்காக  முஸ்லிம் மக்கள் எந்த நட்டஈடும் கோராமல் தங்களின் வீடு, மதில்களை அகற்றி வழங்கியுள்ளபோதும் குறித்த வீதி அபிவிருத்தி இடை நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த மக்களின் தியாகத்தை கெளரவிக்கும் வகையில் குறித்த வீதியை விரைவாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, தெளிவுபடுத்தலின் பாேதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அட்டுலுகம விதாகம வீதி அபிவிருத்திக்காக அந்த பிரதேச முஸ்லிம் மக்கள் எந்தவித நட்ட ஈடும் பெற்றுக்கொள்ளாமல் தமது வீடுகளையும் பாதுகாப்பு மதில்களையும் அகற்றி சந்தர்ப்பம் வழங்கியுள்ள நிலையில் தற்போது அந்த வீதியின் இரு மருங்கிலும் வாய்க்கால் கட்டமைப்பு ஏற்படுத்தப்படாமல் வேறுமனே தார் மாத்திரம் இடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவே தெரிய வருகிறது. அவ்வாறு இடம்பெறுமானால் இது அந்த பிரதேச முஸ்லிம் மக்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்கு செய்யும் பாரிய அநீதியாகும்.

இலங்கையில் அடுலுகம முஸ்லிம் மக்கள் மாத்திரமே எந்த நட்டஈடும் கோராமல தங்களின் வீடு, பாதுகாப்பு மதில்களை அகற்றி, வீதி அபிவிருத்திக்காக எங்களுக்கு இந்த இடவசதியை வழங்கி இருக்கிறார்கள்.

அதனால் இந்த மக்களுக்கு செய்யும் கெளரவமாக, இந்த வீதி அபிவிருத்திக்காக மதிப்பிடப்பட்ட பிரகாரம் குறித்த வீதியை அபிவிருத்தி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்த இடத்தில் 3ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கும் அல் கஸ்ஸாலி வித்தியாலயம் அமைந்திருக்கிறது.

குறித்த வீதி அபிவிருத்தி நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதால், மாணவர்கள் உள்ளிட்ட பாதசாரிகள் அந்த வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் குறித்த வீதியை விரைவாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதற்கு போக்குவரத்து அமைச்சர் சார்ப்பாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளிக்கையில், ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் தவணை இடைநிறுத்தப்பட்டுள்ளதால், குறித்த வீதி அபிவிருத்தி நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

என்றாலும் ஆயிரம் கிலாே மீட்டர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த விதி அபிவிருத்தியை பிரேரிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நடவடிக்கை இடம்பெற்று வருகிறது என்றார்.