அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் 19.16 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1664.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களின் செயல்பாடுகள் குறித்து, இன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது: ”தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 20 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் கடந்த ஜூலை 22ம் தேதி நிலவரப்படி, 44,61,486 தொழிலாளர்கள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர்.
மாவட்ட அளவில் வாரிய பணிகளான பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் பெறுதல் மற்றும் ஒப்பளிப்பு செய்து பணப்பயன்களை தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்புதல் ஆகிய பணிகள் 40 தொழிலாளர் உதவி ஆணையர்களால் இணையதள வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம், விபத்து மரணம், இயற்கை மரணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் புதியதாக 16,78,138 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.
மேலும், 19,16,292 தொழிலாளர்களுக்கு ரூ.1664.71 கோடி நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்ட படி, 3,71,922 தொழிலாளர்களுக்கு ரூ.216.09 கோடி நலத்திட்ட உதவியாக வழ்ஙகப்பட்டுள்ளது. பிற துறைகளுடன் சரிபார்ப்பு பணிகளுக்காக நிலுவையில் உள்ள கேட்பு மனுக்களையும், விவரங்களை விரைவில் பெற்று கேட்பு மனுக்களை காலதாமதமின்றி விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.