தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்காக இலவசமாக நீதிமன்றில் ஆஜராகுவதாக வாக்குறுதி வழங்கி அவர்களை வீதிக்கிறக்கிய மக்கள் விடுதலை முன்னணியின் சட்டத்தரணி சுனில் வடகல பணி இடைநிறுத்தப்பட்டுள்ள மின்சார சபையின் 62 சேவையாளர்களிடமிருந்து 55 இலட்சம் ரூபா சேவை கட்டணத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என மின்சாரத்துறை மற்றும் வலு சக்தித்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது ஆளும் தரப்பின் உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்தே வாய்மூல விடைக்கான வினாக்களின் போது முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
மின்கட்டணத்தை திருத்தம் செய்ய அரசாங்கம் கொள்கை ரீதியில் எடுத்த தீர்மானத்துக்கு அமைய கடந்த 2022 ஆம் ஆண்டு மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மூன்று தடவைகள் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,மூன்று தடவைகள் மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய மின்சார சபை சட்டத்தை நிறைவேற்றினால் மின்கட்டமைப்பு துறையின் சகல கட்டமைப்புக்களும் தனியார் மயப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி மின்சார சபை தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களிலும்,தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள்.
மின்சார சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மின் விநியோகம் மற்றும் பொது சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என்று குறிப்பிட்டோம்.ஒரு சில தொழிற்சங்கத்தினர் சேவை கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.
புதிய மின்சார சபை சட்டம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டு,சட்டம் இயற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மின்சார சபை தனியார்மயப்படுத்தப்படவில்லை. தொழிற்சங்க நடவடிக்கையின் போது மின்சார சபையின் 62 சேவையாளர்கள் மின்சார சபையின் நிதி கரும பீடத்தை மூடி சேவை கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தினார்கள்.
இவர்களை நான் சேவையில் இருந்து நீக்கவில்லை.மின்சார சபையின் கட்டுப்பாட்டாளரே அவர்களை சேவையில் இருந்து தற்காலிகமாக நீக்கினார்.
இவர்களுக்கு எதிராக நிறுவன மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த தொழிற்சங்கத்தினரை மக்கள் விடுதலை முன்னணியினரே வீதிக்கு இறக்கினார்கள். தொழிற்சங்க போராட்டத்தின் போது ஏதேனும் நெருக்கடிகள் ஏற்பட்டால் நீதிமன்றத்தில் இலவசமாக முன்னிலையாகுவதாக மக்கள் விடுதலை முன்னணியினர் குறிப்பிட்டுள்ளார்கள்.இருப்பினும் இந்த 62 சேவையாளர்களிடமிருந்து மக்கள் விடுதலை முன்னணியின் சட்டத்தரணி சுனில் வடகல 55 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார்.நாட்டு மக்கள் உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.