பங்களாதேஷில் இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது – அமைச்சர் மனுஷ

42 0

பங்களாதேஷில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. தேவை ஏற்படும் பட்சத்தில் அவர்களை நாட்டுக்கு அழைத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ராஜிகா விக்கிரமசிங்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பங்களாதேஷில் 2,835 இலங்கையர்கள் தொழில் மற்றும் தொழிற் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், அங்கு கல்வி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ள இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் சரியான எண்ணிக்கையை உடனடியாக தெரிவிக்க முடியாது.

எவ்வாறெனினும், அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதுவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அங்குள்ள நிலவரம் தொடர்பாக கேட்டறிந்து வருகிறோம். அவர் வழங்கிய தகவல்களின்படி இலங்கையர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் கிடையாது.

பங்களாதேஷில் உள்ள இலங்கையர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் நிலை காணப்பட்டால் அவர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும். அத்துடன் அவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பங்களாதேஷில் இடம்பெறும் நெருக்கடி நிலை தொடர்பில் நாம் பெரும் கவலையடைகின்றோம். அந்நாட்டு அரசாங்கம் மிக அண்மையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கமாகும்.  பலவந்தமாக நாட்டில் குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கான குறுகிய நோக்கத்துடன்  நடவடிக்கைகள் அங்கு முன்னெடுக்கப்படுகின்றன.

எமது நாட்டிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதேபோன்ற வன்முறையை ஏற்படுத்தி பாராளுமன்றத்திற்கு தீ வைக்க முயன்றனர்.

ஜனாதிபதி மாளிகை ஜனாதிபதியின் வாசஸ்தலம் உள்ளிட்ட கட்டிடங்களுக்குள் அத்துமீறி பிரவேசித்து சேதப்படுத்தி அத்தோடு இல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்களை படுகொலை செய்து அதன் பின்னர் பாராளுமன்றத்திற்கு தீ வைத்து ஜனநாயகத்தை பூண்டோடு ஒழிக்க முற்பட்டனர். தற்போதைய பங்களாதேஷ் சம்பவங்கள் அதனையே எமக்கு நினைவுக்கு கொண்டு வருகின்றன.