என்னை படுகொலை செய்ய இராஜாங்க அமைச்சர் சதி உரிய விசாரணைகளை முன்னெடுங்கள்

34 0

என்னை படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி செய்வதாக இணையத்தள செய்தி சேவை ஒன்றில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்து பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர் மனித படுகொலையுடன் தொடர்புடையவர்  என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை (23)  சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

என்னை படுகொலை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் சதி செய்வதை வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவொன்று கண்டுபிடித்துள்ளதாக தனியார் இணையத்தள செய்தித் சேவை கடந்த 20 ஆம் திகதி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அச்செய்தி பாரதூரமானது.இந்த விடயம் தொடர்பில் நான் சபாநாயகருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.

என்னை படுகொலை செய்வதற்கு சதி செய்வதாக   கூறப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை  படுகொலை செய்தமை  மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்துகின்றேன் என்றார்.