இந்திய மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது

30 0

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுப்பட்ட இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடி விசைப் படகு  மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகின் பின் பகுதி சேதம் அடைந்து படகில் இருந்த மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கரை சேர்ந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை சுமார் 2 மணியளவில் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லைக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர்  இரண்டு விசை படகையும் அதிலிருந்த  9 இந்திய மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்  காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களிடம் முதல் கட்ட விசாரணை நடத்திய பின் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் அனைவரும்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக்கு பின் மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.