கறைபடிந்த கறுப்பு யூலை ஜனாதிபதி தேர்தல் பெயரால் சிங்கள தேசத்தை புரட்டுகிறது!

102 0

ர்மிஷ்டரின் ஆசிர்வாதத்துடன் கட்டவிழ்க்கப்பட்ட தமிழினப் படுகொலையால் கறுப்பு யூலை சர்வதேசப் புகழ்பெற்றது. இந்த வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படுமென எதிர்பார்த்திருக்க, 22வது அரசியல் திருத்தம் என்ற பெயரில் அரங்கேறும் அகங்கார அரசியல் அனைவரின் முன்னாலும் கேள்விக்குறியாக நிற்கிறது.
பிறந்திருக்கும் யூலையின் கடைசி வாரம் இலங்கை அரசியல் வரலாற்றில் கொடூரமான கறைபடிந்த நாட்களைக் கொண்டது. கறுப்பு யூலை என்று சொன்னதும் 1983 யூலை மாத தமிழினப் படுகொலை நினைவுக்கு வரும்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று கடந்த வாரம் குறிப்பிட்டது போன்று இலங்கை அரசின் தவறான செயற்பாடுகளுக்காக இழிபுகழ் பெற்ற மாதமாக யூலை பதிவு பெற்றுள்ளது. இது பெரும்பான்மையினரான சிங்களவரின் வரலாற்றில் இருண்ட அடையாளமென அந்தப் பத்திரிகைக் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

1956ல் காலிமுகத்திடலில் சாத்வீகப் போராட்டம் நடத்திய தமிழர்களுக்கு எதிராக அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் குண்டர்கள் ஆரம்பித்து வைத்த இனரீதியான தாக்குதல் 1958, 1977 என்று தொடர்ந்து, 1983ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் தர்மிஷ்டர் என அழைக்கப்பட்ட அவரது ஆசிர்வாதத்துடன் கோரத்தாண்டவம் ஆடி, இனப்படுகொலை என்று உலகுக்கு அடையாளப்படுத்தியது.

1983 யூலை 23ல் சிறீலங்கா ராணுவத்தினர் 13 பேர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் கொல்லப்பட்டதை காரணமாக்கி, ஏற்கனவே நன்கு திட்டமிட்டிருந்த தமிழினப் படுகொலையை ஜெயவர்த்தன அரசு அரங்கேற்றியது. இவ்வாறான மிலேச்சத்தனமான முடிவை எட்டுவதற்கு ஜெயவர்த்தன திட்டமிட்டு காத்திருந்தார் என்பதை லண்டன் ரெலிகிராப் பத்திரிகைக்கு அந்த மாத முற்பகுதியில் அவர் வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்ட வார்த்தைகள் நேரடிச் சாட்சி.

”Really, if I starve the Tamil people out, the Sinhala people will be happy” (உண்மையாக, தமிழ் மக்களை நான் பட்டினி போடுவேன் என்றால், சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவர்) என்று முழுநாட்டுக்கும் தாமே ஜனாதிபதி என்று கூறிய ஒருவர் ஒரு இனத்தை பட்டினி போட்டு இன்னொரு இனத்தை மகிழ்ச்சியடைய வைக்கக்கூடியவர் என்றால், அவர் எவ்வாறானவர் என்பதை புரிந்து கொள்ள நேரமெடுக்காது.

தமிழினப் படுகொலைக்காக காத்திருந்த சிங்களப் படையினரையும், சிங்கள பௌத்த வெறியர்களையும், இவர்களுக்குத் துணைபோக நின்ற அரசியல்வாதிகளையும் எவ்வளவு தூரத்துக்கு ஜெயவர்த்தனவின் சொல்லாடல் உசுப்பேற்றியது என்பதை ஒரு வாரமாக காண முடிந்தது.

இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்று தெற்காசியாவின் புகழ்பெற்ற பொதுநூலகத்தை காவற்படையினர் மூலம் தீக்கிரையாக்கிய அமைச்சர்கள் சிறில் மத்தியு, காமினி திசநாயக்க ஆகியோர் மீது ஜெயவர்த்தன நடவடிக்கை எடுத்திருப்பாரானால், யூலை இனப்படுகொலை முழுவீச்சுப் பெற்றிருக்காது என்பது சர்வதேசத்தின் கருத்து.

அன்றைய பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், பிரதம நீதியரசர் ஆகியோர் தமிழர்களாக இருந்தும் அவர்களால்கூட இனப்படுகொலையை தடுக்க முடியாது போனது. இதனை தமக்குச் சாதகமாக்க முனைந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆகஸ்ட் முதல் வாரம் ராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றியபோது – சட்டம், ஒழுங்கு, நீதி பரிபாலனம் ஆகியவற்றுக்கு பொறுப்பாக தமிழர்களை எனது அரசில் வைத்துக் கொண்டு தமிழரைப் படுகொலை செய்ய நான் எண்ணியிருப்பேனா என்று கேட்டு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றது நகைப்புக்கிடமானது.

யூலை 23ல் தமிழருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்களை தடுப்பதற்கு உடனடியாக ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அகதி முகாம்களை உருவாக்கவும் நான்கு நாட்கள் கடந்தது. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் சிறப்புத் தூதுவராக நரசிம்மராவ் விஜயம் மேற்கொண்ட வேளையிலேயே சில நடவடிக்கைகளை இவர் எடுக்க தள்ளப்பட்டார்.

ஏறத்தாழ நாலாயிரம் வரையான தமிழர் கொல்லப்பட்டனர். ஐயாயிரம் வரையான தமிழர்களின் வணிக நிறுவனங்களும் பதினெண்ணாயிரம் வரையான வீடுகளும் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு லட்சத்து முப்பதினாயிரம் வரையானவர்கள் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். சுமார் ஒன்றரை லட்சம் வரையானவர்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகினர் (இப்பத்தியாளரும் அவரது குடும்பமும் இதற்குள் அடங்குவர்).

அத்துருகிரிய என்ற இடத்தில் அமைந்திருந்த அமைச்சர் சிறில் மத்தியுவின் கீழான அரசாங்க உருக்குக் கூட்டுத்தாபனத்தில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தயார் நிலையிலிருந்த பாரிய கத்திகள், வாள்கள், இரும்புக் குழாய்களை கையில் ஏந்தியவாறு, வாக்காளர் பதிவுப் பட்டியலால் அடையாளம் காணப்பட்ட தமிழர்களின் இருப்பிடங்கள் அடித்து நொருக்கப்பட்டன. அப்பாவி மக்களைப் பாதுகாக்க வேண்டிய ஆயுதப் படையினர் குண்டர்களுக்கு ஆதரவு வழங்கி ஊக்கப்படுத்தினர் என்பதை சர்வதேச நிறுவனங்கள் தங்கள் அறிக்கைகளில் சுட்டியுள்ளன.

1983 யூலையில் ஆரம்பமான இரு இனங்களதும் விரிசல் சுமார் இரண்டரை தசாப்த கால யுத்தமாக நீண்டதால் தமிழின அழிப்பு ஒருபுறத்தில் இடம்பெற மறுபுறத்தில் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் போனது. மோசமான நிதி நெருக்கடியைச் சந்தித்ததால் இந்து சமுத்திர பிராந்தியத்தில் மிகவும் வறிய நாடாக இது அடையாளப்படுத்தப்பட்டதாக கொழும்பின் டெய்லி மிறர் பத்திரிகை கடந்த வாரம் தெரிவித்தது முக்கியமானது.

யுத்த வெற்றிச் செருக்கில் மிதந்த ராஜபக்ச குடும்பம் சிங்கள மக்களின் மனோநிலையை சாதகமாக்கி தங்களின் ஆட்சியைத் தக்கவைத்தவாறு கோடானுகோடி நிதி மோசடிகளில் ஈடுபட்டதன் விளைவாகவே அறகலய உருவானது. அலங்கார அரசியலில் ஈடுபட்டவர்கள் தப்பியோட, அகங்கார அரசியல் வாரிசான ரணில் விக்கிரமசிங்க கட்சிக் கட்டிலில் ஏறும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் தொடராகவே இந்நாட்களில் பேசப்படும் ஜனாதிபதித் தேர்தலையும், இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்த முயற்சியையும் கட்சிகளுக்கிடையே ஏற்படுத்தப்படும் பிளவுகளையும் நோக்க வேண்டும்.

எதிர்வரும் அக்டோபரில் இடம்பெறுமென நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சஜித், அநுர ஆகிய மூவரும் போட்டியிடுவது நிச்சயமாகியுள்ளது. இவர்கள் மூவருடனும் கறுப்பு யூலை என்பது ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டது. அவ்வேளையில் ஜெயவர்த்தன அரசில் அமைச்சராகவிருந்தவர் அவரது பெறாமகன் முறையான ரணில். அதே ஆட்சியில் பிரதமராகவிருந்த ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித். கறுப்பு யூலையின் சூத்திரதாரிகள் என்று சொல்லி ஜெயவர்த்தனவினால் தடைசெய்யப்பட்ட ஜே.வி.பி.யின் வேட்பாளர் அநுர.

ஆக, தமிழின அழிப்பில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுகளாக இவர்கள் மூவரையும் தமிழ் மக்கள் பார்க்கிறார்கள். ஆனால், இந்த மூவரும் தமிழரின் வாக்குகளை நாடி தமிழர் தாயகத்தை நோக்கி வலம்வருகிறார்கள். எதனையும் இலகுவாக மறந்துவிடும் தமிழ்ச் சமூகம் இவர்களை வரவேற்று ஆரத்தி எடுத்து, பொட்டிட்டு, மலர் மாலை சூட்டி வரவேற்பதில் காட்டும் ஆர்வம் வரவேற்கக்கூடியதன்று.

இந்த நிகழ்வுகளின் மறுபக்கமாக ரணிலின் கிளித்தட்டு அரசியல் அவரது கட்சிக்காரர்களை மட்டுமன்றி எதிராளிகளையும் விழி பிதுங்க வைக்கிறது. அறிவிக்கப்பட்டவாறு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமென்று கூறியபடி, தாம் போட்டியிடுவதை சுற்றி வளைத்து தெரியப்படுத்திக் கொண்டு நாட்டின் பல முனைகளுக்கும் நிவாரண உதவிப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இது தேர்தல் பரப்புரைதான். சமகாலத்தில் தம்மைக் கதிரையில் அமர்த்திக் காத்துவரும் பொதுஜன பெரமுனவுக்கு சவால் விடும் வகையிலும் சில நகர்வுகளை மேற்கொள்கிறார்.

இன்னொரு புறத்தே அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டு நாடாளுமன்றம் கொண்டு செல்லும் முயற்சியிலும் தீவிரமாக உள்ளார். ஜனாதிபதியின் ஒரு தவணைக்கான காலத்தை ஐந்து வருடங்களாக நிர்ணயிப்பது இத்திருத்தம். இத்திருத்தத்தை அமைச்சரவையில் ஏற்றுக் கொண்ட நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச முரண்பட்ட நிலையில் காணப்படுகிறார். இதனை வர்த்தமானியில் பிரசுரிக்கக்கூடாதென தமது அமைச்சின் செயலாளருக்கு இவர் உத்தரவிட்டதான செய்தி பத்திரிகைகளில் வெளிவந்த மை காய்வதற்கு முன்னர், தமக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி வர்த்தமானியில் பிரசுரித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க. இதே போக்கையே இப்போது மகிந்த தரப்புடனும் மேற்கொண்டு வருகிறார்.

22ம் திருத்தச் சட்டத்தை வர்த்தமானியில் பிரசுரித்ததால் ஜனாதிபதி தேர்தலுக்கு எந்த தடையும் இல்லையென தேர்தல் ஆணையாளர் நாயகம் சிறீரத்நாயக்க தெரிவித்துள்ளார். இத்திருத்தம் தொடர்பாக எவரும் எவ்விதத்திலும் அச்சமடையத் தேவையில்லை என்று ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்துள்ளார். இவற்றை வழிமொழிவதுபோல இந்த வார நாடாளுமன்ற அமர்வில் 22வது திருத்தம் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் அமரவீரவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இவை எதனையும் நம்பும் நிலையில் எதிரணியினர் எவரும் இல்லை. தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் கடந்த புதன்கிழமை 17ம் திகதி தேர்தல் ஆணையகத்துக்கு வந்துள்ளது. ஆனால், இதுவரை தேர்தல் ஆணையகம் அறிவிக்கவில்லை. இந்த வாரத்தில் வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் 22வது திருத்தம் இடையில் புகுந்து எல்லோர் முன்னாலும் பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. 1983ல் சிங்கள தேசம் வித்திட்ட கறுப்பு யூலை இப்போது அவர்களையே சுற்றிவளைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது. இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது தங்களின் பொதுவேட்பாளரை விரைவில் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களுக்கானது.

பனங்காட்டான்