நான் இலங்கைக்கு வந்துள்ளதை எண்ணி சந்தோசமடைகின்றேன். எனது அடுத்த திரைப்படத்தில் 30 வீத படப்பிடிப்புகளை இலங்கையில் நடத்த திட்டமிட்டுள்ளேன். அடுத்த படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள இசைக் கலைஞர்களை இணைத்துக்கொள்ளவுள்ளேன். இதற்காக இலங்கை அரசுடன் பேசி வெகு விரைவில் திட்டமிட எண்ணியுள்ளேன் என தென்னிந்திய திரையுலக திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக ஆற்றல்களைக் கொண்ட விஜய் ஆண்டனி தெரிவித்தார்.
தென்னிந்திய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பிரம்மாண்ட இசை நிகழ்வு இலங்கையில் முதல் முறையாக நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு அறிமுக நிகழ்வு மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (21) கொழும்பு One Galle Face வணிக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தென்னிந்திய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பிரதான அனுசரணையாளர்களான ஆரா என்டடைமன்ட்டின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் ராமநாதன் மற்றும் சதீஸ் ஜுவல்லரியின் நிர்வாகப் பணிப்பாளர் இராமையா சதாசிவம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
OG Vibe – Vijay Antony Live In Colombo என்ற பிரமாண்ட இசை நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளதுடன் இதற்கான டிக்கெட்டுகள் தற்போது விற்பனையாகின்றன.
இலங்கையில் முதல் முறையாக பிரம்மாண்டமான முறையில் Vijay Antony Live In Colombo இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ள நிலையில் இந்த இசை நிகழ்வை ஆரா என்டடைன்மன்ட் மற்றும் சதீஸ் ஜுவல்லரி ஆகியன இணைந்து வழங்குகின்றன.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து வினையா, ஹரிப்பிரியா , ரேஷ்மா , ருக்த்சர் , ஷிரேஷா , விருஷா , பிரசன்னா, மகாலிங்கம் , சந்தோஷ் , ஆதித்யா , ஹர்ஷா , எம்சீ ஜேஸ் , ஏ டீ கே (தினேஷ் கனகரத்னம் ) , கிரிஷ் மனோஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
ஊடகவியலாளர் சந்திப்பில் நேரடியாக கலந்துகொண்ட விஜய் ஆண்டனி, இலங்கையின் முண்னனி இசை கலைஞர்களில் ஒருவரான இராஜ் வீரரத்னவுடன் இணைந்து பாடல்களை வழங்கியமை மற்றும் புகழ்பெற்ற சொல்லிசை கலைஞர் தினேஷ் கனகரத்னம் என இலங்கைக்கும் அவருக்குமான தொடர்பினை நினைவுகூரிய விஜய் அன்டனி அரங்கத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சகோதர மொழி பாடல்களையும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பாடுவதாக ஒப்புக்கொண்டார்.
காலில் செருப்பு அணியாது வந்திருந்தமை தொடர்பில் விஜய் ஆண்டனியிடம் ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அதற்கு விஞ்ஞான ரீதியாக எதுவும் காரணம் இல்லை, அமைதியான ஒரு எழிமை வாழ்க்கை முறைக்கு முதலில் எதை விட வேண்டும் என சிந்தித்து செருப்பினை விட்டதாகவும் முடிந்தளவு செருப்பு அணியாமல் பயணம் செய்து பாருங்கள் நிச்சயம் உங்கள் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை உணர்வீர்கள் என கூறியிருந்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய விஜய் ஆண்டனி, மேலும் தெரிவிக்கையில்,
இசைதான் எனது பாதை என முடிவு செய்தேன் . எனது வெற்றிகளுக்கு பிரபஞ்சமே காரணம். பிரபஞ்சம் உங்களையும் வெற்றிக்கு அழைத்து செல்லும். மனதில் நிம்மதியை உணர்கிறீர்கள் என்றால் அமைதியாக இருக்கிறீர்கள் என்றால் அதுவே வெற்றி .
இலங்கையின் கலைஞர்களுக்கு இதற்கு முன்பு வாய்ப்பளித்தமை முடிவு செய்யப்படாமல் தானாகவே அமைந்தொன்று. எனது அடுத்த படைப்புகளுக்கு இலங்கை கலைஞர்களை இணைத்துக்கொள்ளவுள்ளேன்.
எனது அடுத்த திரைப்படத்தில் 30 வீதமான படப்பிடிப்புகளை இலங்கையில் நடத்த திட்டமிட்டுள்ளேன்.
படப்பிடிப்புகளுக்கு ஏற்ற இடமாக கண்டி, நுவரெலியா போன்ற இடங்கள் காணப்படுகின்றன. மேலும் இலங்கை அரசுடன் கலந்துரையாடி படப்பிடிப்புக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார்.