தமிழ் தேசிய பேரவையின் புரிந்துணர்வு உடன்பாடு நாளை!

23 0

தமிழ் தேசிய பேரவையின் புரிந்துணர்வு உடன்பாடு நாளை திங்கட்கிழமை (22) கைச்சாத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களின் ஒன்றிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையும் கூட்டிணைந்து தமிழ்த் தேசிய பேரவை என்ற பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கு இணக்கப்பாட்டை எட்டியுள்ள நிலையில் கடந்த 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின் மறைவினையொட்டி இந்த புரிந்துணர்வு உடன்பாட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட இந்த கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டபோதும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கு நேரமின்மை காரணமாக பிற்போடப்பட்டது.

அதனையடுத்து சிவில் அமைப்பின் பிரமுகர்களுக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் உரையாடல்கள் இடம்பெற்ற நிலையில் நாளைய தினம் கைச்சாத்திடும் நிகழ்வை முன்னெடுப்பதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிரகாரம், தந்தை செல்வா கலையரங்கில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.