பொதுஜன பெரமுன தனித்து வேட்பாளரை நிறுத்தும் சாத்தியம்

19 0

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஆளும் கட்சி முரண்பாடுகள் தீர்க்கப்படாத நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்தாபகர் பஷில் ராஜபக் , தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் தம்மிக பெரேரா ஆகியோருக்கு இடையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே தனித்து வேட்பாளரை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் மொட்டு சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிபந்தனையாக உள்ளது. இதற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள பங்காளி கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அதே போன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இதில் உடன்பாடு இல்லை.

இவ்வாறானதொரு நிலையிலேயே உத்தேச ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காது தனித்து வேட்பாளரை நிறுத்துவதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வாய்ப்பளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தயாராக உள்ளமையை தம்மிக பெரேரா மீண்டும் தெரியப்படுத்தியுள்ளதுடன், கட்சி அளித்த இலக்குகளை தான் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தம்மிக பெரேராவுக்கு ஆதரவளிப்பதிலோ ஜனாதிபதி வேட்பாளர் அந்தஸ்தை வழங்குவதிலோ எவ்விதமான பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ள பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு அடுத்த வாரத்துக்குள் வந்துவிடும். அதற்கு பின்னர் தீர்மானிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.