நாட்டைப் பிரிக்காமல் தமிழர்களுக்கு நிச்சயம் அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு மேலும் கூறுகையில்,
நாட்டின் முக்கிய பல பிரச்சினைகளுக்குத் தீர்வாகத்தான் இந்தத் தேசிய அரசு உதயமானது. இந்த அரசு வந்து இரண்டு வருடங்களில் பல முக்கிய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளைக் கூறலாம்.20 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் காணிகள் பல விடுவிக்கப்பட்டுள்ளன.
காணாமல்போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கானநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காக அலுவலகத்தை அமைப்பதற்கான சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அரசியல் தீர்வை வழங்குவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அரசு ஆட்சியைக் கையேற்றது முதல் அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
அதற்கு ஏற்பவே புதிய அரசமைப்பு கொண்டு வரப்படவுள்ளது. அந்தப் புதிய அரசமைப்பின் ஊடாக வழங்கப்படவுள்ள அரசியல் தீர்வானது ஒருபோதும் நாட்டைப் பிளவுபடுத்தாது.
நாட்டை இரண்டாகப் பிரிக்காமலே அதிகாரப் பகிர்வை நாம் வழங்குவோம்.
தமிழீழத்தை உருவாக்கும் விதத்தில் அரசியல் தீர்வை வழங்கப் போவதாக மஹிந்த அணியினர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை என்றார்.