ஜயம்பதி விட்ட தவறை திருத்தவே 22ஆவது திருத்தம்!

24 0

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்ன விட்ட தவறை 22ஆவது சட்டமூலம் ஊடாக திருத்தம் செய்ய ஜனாதிபதி  முயற்சிக்கிறார். ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (20) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் மயக்க நிலை காணப்படுவதால் தான் மூன்று முறை ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து உயர்நீதிமன்றத்தில் மூன்று முறை வியாக்கியானம் கோரப்பட்டு, ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்று உயர்நீதிமன்றம் மூன்று முறையும் தெளிவாக வியாக்கியானம் வழங்கியுள்ளது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டது. ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்ன விட்ட தவறை திருத்தம் செய்வதற்காகவே ஜனாதிபதி அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை சமர்ப்பித்துள்ளார். ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்பதில் காணப்படும் சர்ச்சையை நிவர்த்தி செய்வது இந்த சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக முன்னெடுக்கிறது. தேர்தல் ஆணைக்குழுவுடன் ஜனாதிபதி ஒருபோதும் கலந்துரையாடவில்லை என ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆகவே 22ஆவது திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

ஜனாதிபதியின் சிறந்த திட்டங்களினால் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் மீண்டது என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து நிலையான மீட்சி பெற வேண்டுமாயின் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்றார்.