கல்வீச்சில் இருந்து தப்பிக்க வாலிபர் ஒருவரை மனித கேடயமாக பயன்படுத்திய ராணுவவீரர்களின் செயலை கண்டித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரில் ராணுவவீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் மீது உள்ளூர்வாசிகள் கற்களை வீசி எறிவதும், அப்படி தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், ஒரு ராணுவ வாகனத்தின் முன்பக்கம் ஒருவரை கட்டிவைத்து ராணுவ வீரர்கள் அந்த வாகனத்தை ஓட்டி செல்வதும், “தங்கள் மீது கல்வீச்சு நடத்தினால் அவர்களுக்கும் இதே கதிதான்” என ராணுவவீரர் ஒருவர் பேசும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. கல்வீச்சில் இருந்து தப்பிக்க வாலிபர் ஒருவரை மனித கேடயமாக பயன்படுத்திய ராணுவவீரர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத ராணுவவீரர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பான விசாரணை துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் இருக்கும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் தங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்களை குறிவைத்து எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.