அமெரிக்க துணை அதிபர் தென்கொரியா விரைந்தார்

283 0

வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா மக்களின் தோள்களுக்கு துணையாக நின்று எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 5 முறை அணுகுண்டு சோதனைகளையும், எண்ணற்ற முறை ஏவுகணை சோதனைகளையும் நடத்தி, அந்த நாடு உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஐ.நா. சபையும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளபோதும், வடகொரியா அதற்கெல்லாம் அடங்குவதாக இல்லை. 6–வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த அந்த நாடு தயாராகி வருவதாக செயற்கைகோள் படங்கள் அம்பலப்படுத்தின. எந்த நேரத்திலும் அந்த சோதனையை நடத்துவதற்கு அந்த நாட்டின் ஆட்சியாளர் கிம் ஜாங் அன் உத்தரவிடுவார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் வடகொரியாவை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன் பங்குக்கு வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார். இதற்காக அவர் ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளார்.
அவரது உத்தரவின்பேரில் கொரிய தீபகற்ப பகுதிக்கு அமெரிக்காவின் வலிமை மிகுந்த யுஎஸ்எஸ் காரல் வின்சன் விமானம் தாங்கி போர்க்கப்பலும், யுஎஸ்எஸ் வேனே இ மேயர், யுஎஸ்எஸ் மைக்கேல் மர்பி நாசகார கப்பல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 5 ஆயிரம் கடற்படை வீரர்களும் உள்ளனர். எந்த நேரத்திலும் வடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் அங்கு போர்ப்பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையில், வடகொரிய நாட்டை நிர்மாணித்த கிம் இல் சுங்கின் 105–வது பிறந்தநாள், அந்நாட்டின் தலைநகரான பியாங்யாங்கில் கடந்த சனிக்கிழமை கோலகலாமாக கொண்டாடப்பட்டது. அப்போது, அமெரிக்காவின் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளதாக வடகொரியா சவால் விட்டது.
இந்த நிலைப்பாட்டுக்கு பலம் சேர்க்கும் வகையில், வடகொரியா நேற்று மீண்டும் ஒரு அதிநவீன ஏவுகணையை விண்ணில் செலுத்தி பரிசோதித்தது. இந்த சோதனை தோல்வியில் முடிந்தது. இந்த ஏவுகணை பரிசோதனையை தனக்கு விடுக்கப்பட்ட இரண்டாவது சவாலாக அமெரிக்கா கருதுகிறது.
இந்நிலையில், வடகொரியாவுக்கு எதிரான பகைநாடான தென் கொரியாவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் வாஷிங்டன் நகரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இன்று தென்கொரியாவுக்கு வந்தடைந்தார்.
வடகொரியா-அமெரிக்கா இடையில் போர் மூளக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி தென்கொரியா வந்துள்ள மைக் பென்சின் அதிரடி வருகை சர்வதேச அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வடகொரியா-தென்கொரியா நாடுகளுக்கு இடையிலான எல்லைக்கோட்டுப் பகுதியான பன்மஞ்சோம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தென்கொரியா-அமெரிக்கா கூட்டு ராணுவ முகாமில் உள்ள இருநாட்டு வீரர்கள் மத்தியில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வடகொரியா நாட்டு ராணுவமும் அங்குள்ள மக்களும் தனது நேச நாடுகளுக்கு ஆதரவு அளித்துவரும் அமெரிக்காவின் பலத்தை தவறாக கணக்கிட்டு விடக் கூடாது. தென்கொரியாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் எஃகுக் கோட்டையைப் போல உறுதி வாய்ந்ததாகும்.
அனைத்து விவகாரங்களுக்கும் சமாதானமாகவும், அமைதியான முறையிலும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவே அமெரிக்கா விரும்புகிறது. எங்கள் பலத்தின் மூலமாகவும் நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்பதுதான் அமெரிக்க மக்கள் அளிக்கும் நற்செய்தியாகவும் உள்ளது.
அதேவேளையில், தென்கொரியா மக்களின் தோள்களுக்கு துணையாக நின்று எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது.