சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

37 0

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவி்க்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் ஜூலை 22-ம் தேதி அவரை ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதில், வங்கி தொடர்பான அசல்ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறையின் ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதால், தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும், எனக்கோரியிருந்தார்.

மேலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும், எனக்கோரியிருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று நடந்தது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் எம். கெளதமன் ஆஜராகி, அமலாக்கத் துறையால் வழங்கப்பட்ட ஆவணங்கள் கையால் எழுதி, திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும்,அந்த ஆவணங்கள் அனைத்தும் வங்கியில் இருந்து பெறப்பட்டவை தான் என்றும் தெரிவி்த்தார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை நீண்ட காலம் இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இதுபோன்ற மனுக்களை செந்தில் பாலாஜி தரப்பினர் தாக்கல் செய்துவருகின்றனர் என்றும், எனவே இந்தமனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும், எனவும் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரண்டு புதிய மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.அல்லி, அமலாக்கத்துறையின் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜிதாக்கல் செய்திருந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை வரும் ஜூலை 22-ம் தேதியன்று நேரில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.