பெட்ரோ ப்ராடக்ட்ஸ் தொழிற்சாலையில் அவசரகால ஒத்திகை!

37 0

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் சென்னைமாநகராட்சி சார்பில் சென்னை மணலியில் உள்ள தமிழ்நாடு பெட்ரோ ப்ராடக்ட்ஸ் தொழிற்சாலையில் புறவளாக அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர்எம்.வி.செந்தில்குமார் பங்கேற்று ஒத்திகையை தொடங்கி வைத்தார்.

இதில் குளோரின் வாயு கசிவு ஏற்படுவது போன்றும், அதன் விளைவாக சுற்றுப்புறத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதிப்பு அடைவது போன்று சூழலை ஏற்படுத்தி, பொதுமக்களை மீட்பது தொடர்பாக ஒத்திகை பார்க்கப்பட்டது. இதில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், காவல்துறை உட்பட 14 அரசு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு பயிற்சி மேற்கொண்டனர்.இந்நிகழ்வில் பங்கேற்ற மாநகராட்சி துணை ஆணையர் கட்டா ரவிதேஜா, இத்தொழிற்சாலையின் புறவளாக அவசரகால கையேட்டைவெளியிட்டார். தொடர்ந்து அவர்பேசும்போது, ‘‘அபாயகரமானநிகழ்வுகளின் போது எவ்வாறு தங்களை தற்காத்து கொள்வது என்பது குறித்து விளக்கி இருப்பது இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

திருவொற்றியூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் எம்.வி. கார்த்திகேயன் பேசும்போது, ‘‘பேரிடர் காலங்களில்ஒவ்வொரு அரசு துறைகளும் தங்களின் கடமை, பொறுப்பைஉணர்ந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 3 அவசரகால மருத்துவ மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மருத்துவத்துறையை சார்ந்த அலுவலர்களும் பணியாளர்களும் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக் கும் முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக கூடுதல் இயக்குநர் பிரேமகுமாாி, துணை இயக்குநர் கு.சக்தி, மாசுக்கட்டுப்பாட்டு வாாிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன், தமிழ்நாடு பெட்ரோ ப்ராடக்ட்ஸ் நிறுவன இயக்குநர் டி.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.