அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், சென்னைக்கு புறப்பட்டு வரும்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு, கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கம், அமைச்சர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை என அடுத்தடுத்து அரசியல் களத்தில் பரபரப்பான சூழ்நிலை தொடர்கிறது. இந்த நிலையில், டெல்லியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் இடைத்தரகர் சுகேஷ் சந்தர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவர் கொடுத்த தகவலின்படி, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால் அ.தி.மு.க. வட்டாரத்தில் கடும் அதிருப்தி நிலவுவதாகவும், அ.தி.மு.க.வில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் பேசப்பட்டது.
இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க. (அம்மா) அணி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் உடனடியாக சென்னைக்கு வரும்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார். சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள போர்க்கப்பலை பார்வையிடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், போர்க்கப்பலை பார்வையிடும் காரணத்தை வைத்து வரவழைத்து, கட்சியின் தற்போதைய நிலை மற்றும் கட்சியின் இரு அணிகளையும் இணைக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.