முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க. (அம்மா) அணியினரும் (அம்மா) அ.தி.மு.க. அணியினரும் தனித்தனியே தீவிர ஆலேசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க. (அம்மா) அணி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் உடனடியாக சென்னைக்கு வரும்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார். சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள போர்க்கப்பலை பார்வையிடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், போர்க்கப்பலை பார்வையிடும் காரணத்தை வைத்து வரவழைத்து, கட்சியின் தற்போதைய நிலை மற்றும் கட்சியின் இரு அணிகளையும் இணைக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க. (அம்மா) அணியினரும் (அம்மா) அ.தி.மு.க. அணியினரும் தனித்தனியே தீவிர ஆலேசனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20 அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் குழு சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அதேபோல் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டில் மற்ற அமைச்சர் குழுவினர் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு அணிகளும் நாளை இணையவுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முதல்வரை இருமுறை சந்தித்த பின்னர் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை டெல்லி விரைந்துள்ளார். அதிமுக (அம்மா) கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.